இந்தோனேசியத் தேர்தல் கலவரத்திற்குக் காரணம் இன, மத உணர்வே!

நாட்டின் பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல்கள் முடிந்த பின்னர்,  இந்தோனேசியாவில் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பில் இருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது.

நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதில், இந்தோனேசியாவில் உள்ள கட்சிகள் மூன்று பிரச்சினைகளைக் கையாண்டுள்ளதாக, அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் முகம்மது அகுஸ் யூசுஃப் தெரிவித்தார்.

நாட்டின் அதிபராக ஜோகோ விடோடோ – ஊழல் பிரச்சனைகளில் தொடர்புடைய – இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதினால், ஏமாற்றமடைந்த இந்தோனேசியர்களில் ஒரு பகுதியினர் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தவில்லை என ஆகுஸ் கூறுகிறார்.

மாறாக, இந்தப் பிரச்சினைக்குக் காரணம் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதனாலும், உலாமாக்கள் (முஸ்லிம் அறிஞர்கள்) மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பதனாலும், ஜோக்கோ விடோடோ வென்றதால் இந்தோனேசியாவில் சீனர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதனாலும், இந்தோனேசிய தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்பதனாலுமே இந்தப் போராட்டம் வெடித்ததாக அவர் கூறினார்.

“இந்தோனேசியாவில் தற்போது நடந்துவரும் கலவரத்திற்கு ஜோகோவியின் ஊழல் காரணம் அல்ல, மாறாக, இஸ்லாமிய மதம் அழிந்து வருகிறது, உலாமாக்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றனர், நாட்டில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், தேர்தல் ஆணையம் ஏமாற்றுகிறது என்பதுவே காரணம்,” என்று அவர் கூறினார்.

மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் விரிவுரையாளரான அவர், இத்தகைய உணர்வுகள் உண்மையில் ஆபத்தானவை, அரசாங்கத்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், நாட்டை அது பாதிக்கலாம் என்றும் கூறினார்.

“மலேசியாவில் மத மற்றும் இனவாத பிரச்சினைகளைக் கையாள்வதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும், தேர்தல் ஆணையமும் நேர்மையுடனும் நியாயமானதாகவும் நடந்துகொள்ள வேண்டும்,” என தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அதிபர் அறிவிப்பு

தேர்தல் ஆணையம், ஜோகோவி-ஐ பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த ஏப்ரல் 17-ல் நடந்தேறியப் பொதுத் தேர்தலில், ஜொகோ விடோடோ-தான் வெற்றிபெறுவார் என, ஆய்வு நிறுவனங்கள் உட்பட பல தரப்பினர் ஆருடங்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொதுத் தேர்தலுடன், அதிபர் தேர்தலும் ஒருசேர நடைபெற்றதால், அதிகாரப்பூர்வ முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் சில காலம் எடுத்துகொண்டது.

இன்று மாலை வரை, ப்ராபோவோ ஆதரவாளர்கள் மற்றும் இந்தோனேசிய அரசு தரப்பினருக்கும் இடையே நடந்த கலவரத்தில், குறைந்தது 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஜொகோ விடோடோவின் வெற்றியை, 21 மே, அதிகாலை மணி 2 அளவில் தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கும் ஆகுஸ் தனது கவலையைத் தெரிவித்தார்.

“அதிகாலையில், மக்கள் உறக்கத்தில் இருந்தபோது, அறிவித்தது விசித்திரமாக உள்ளது,” என்றார் அவர்.

இந்தக் கலவரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இல்லையேல் இது 1998 சீர்திருத்த காலத்தைவிட மோசமான நிலையை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட கலவரம் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டது என்றால், இம்முறை மதப் பிரச்சனையால் ஏற்படும்.

“இதுதான் அரசியல்வாதிகளின் ஆயுதம். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால், அதற்கு அரசு இயந்திரங்களான காவல்துறை, அதிகாரம், தேர்தல் ஆணையம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.

ஜோகோ விடோடோ, 57, தரப்பு 85,607,362 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ள வேளையில், எதிர்தரப்பான பிராபோவோ, 68,650,239 வாக்குகள் பெற்றுள்ளார்.