கூண்டுக்குள் இருந்த குரங்கைச் சுட்டதற்காக தந்தையும் மகனும் கைது

காணொளி ஒன்றில் பதிவான ஒரு கூண்டுக்குள் இருக்கும் ஒரு குரங்கைத் துப்பாக்கியால் சுடும் சாம்பவம் தொடர்பில் ஒரு தந்தையையும் அவரின் மகனையும் போலீசார் கைது செய்தனர்.

அவ்விருவரும் சித்தியவான், தாமான் கெனாங்கானில் அவர்களின் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் கார்ப்பராட் தொடர்புத் தலைவர் அஸ்மாவதி அஹமட் கூறினார்.

“நேற்றிரவு 9மணிக்கு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

“அச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது”, என்றவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த 20-வினாடி காணொளியில் ஒரு மனிதர் கூண்டுக்குள் இருக்கும் ஒரு குரங்கை நோக்கித் துப்பாக்கியை நீட்டுகிறார்.

‘பேபி சாயாங்’ என்று சொல்கிறாயா இல்லை சுடட்டுமா என்று மனிதர் கூறுவது கேட்கிறது.

அதன் பின்னர் ஒன்றிலிருந்து மூன்றுவரை எண்ணுகிறார். பிறகு குரங்கின் தலையைக் குறி வைத்துச் சுடுகிறார்.