இப்ராகிம் அலியின் புதிய கட்சியில் அம்னோ முன்னாள் உறுப்பினர்கள்

இப்ராகிம் அலி அவரது புதிய அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். அப்பட்டியலில் முன்னாள் அம்னோ தலைவர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் இப்ராகிம் அலி, மூன்று தவணைகள் ஜெம்போல் எம்பி ஆக இருந்தவரும் முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை அமைச்சருமான முகம்மட் காலிட் முகம்மட் யூனுசை பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா(புத்ரா)-வின் துணைத் தலைவராக நியமனம் செய்தார்.

முன்னாள் அம்னோ மகளிர் தகவல் தலைவர் ஹ்மிடா ஒஸ்மான், பெர்காசா உதவித் தலைவர் ஹசான் பஸ்ரி முகம்மட், ஒரு வழக்குரைஞரான முகம்மட் கைருல் அஸாம் அப்துல் அசீஸ் ஆகியோர் கட்சியின் மூன்று உதவித் தலைவர்களாக இருப்பர்.

நேற்று அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் ஓராண்டுக் காலத்துக்கு 2020, மே 8வரை பதவியில் இருப்பார்கள் என்றும் அதன் பின்னர் கட்சியின் முதலாம் ஆண்டுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் இப்ராகிம் தெரிவித்தார் என மலேசியா கெஜட் ஆன்லைன் கூறிற்று.

புத்ரா கட்சி மெர்டேகா தினமான ஆகஸ்ட் 31-இல் அல்லது மலேசிய தினமான செப்டம்பர் 16-இல் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.