‘கர்வமிக்க’ முக்ரிஸ் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ஜோகூர் அம்னோ இளைஞர்கள் கோரிக்கை

ஜோகூர் அம்னோ இளைஞர் பிரிவு, கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டருக்கு வணக்கம் தெரிவிக்க மறுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியது.

அச்சம்பவத்தைக் காண்பிக்கும் காணொளி ஒன்று, காலஞ்சென்ற பகாங் ஆட்சியாளர் சுல்தான் அஹமட் ஷா அல்-முஸ்டா’இன் பில்லாவுக்கு இறுதி மரியாதை செலுத்த நேற்று இஸ்தானா அபு பக்காருக்கு வருகை தந்த முக்ரிஸ் அங்கு நின்றிருந்த ஜோகூர் அரசக் குடும்பத்தாரைக் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்வதாகக் காண்பிக்கிறது.

முக்ரிஸின் செயலைக் கர்வமிக்கது என்று வருணித்த ஜோகூர் அம்னோ இளைஞர் தலைவர் முகம்மட் ஹைரி மாட் ஷா, அவர் ஜோகூர் ஆட்சியாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

பெர்சத்து துணைத் தலைவரும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வருமான முக்ரிஸ் “மலாய்க்காரர் பண்பை” இழந்து விட்டதாக அவர் சொன்னார்.

“….அவருடைய போக்கு சிறுபிள்ளைத்தனமானது, முறைகேடானது. ஒரு மந்திரி புசார் இப்படியா நடந்து கொள்வது”, என்றவர் சாடினார்.