முன்னாள் பிரதமர் நஜிப்பை விவாதத்திற்கு அழைத்து, டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் சொந்தமாக சவக்குழி தோண்டிக் கொண்டார்.
முன்னதாக, நஜிப்பை விவாதத்திற்கு அழைத்த, இஸ்கண்டார் புத்ரி எம்பி-யுமான கிட் சியாங், பிறகு பின் வாங்கியது தொடர்பில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் இவ்வாறு கூறியுள்ளார்.
நஜிப் வரமாட்டார் என்ற எண்ணத்தில், அவரை விவாதத்திற்கு அழைத்த கிட் சியாங், நஜிப் ஒப்புகொண்டதால், தான் விரித்த வலையில் தானே மாட்டிக்கொண்டதாக அருட்செல்வன் தெரிவித்தார்.
‘சாதாரண மக்கள் மத்தியில், நஜிப்பை விவாதத்திற்கு அழைத்த கிட் சியாங் ஒரு புலியைப் போல் தோற்றமளித்திருப்பார், அதேசமயம் அவர் பின்வாங்கியது, அவரை ஒரு பூனைபோல் சித்தரித்துவிட்டது,” என்றார் அருட்செல்வன்.
“தொடக்கத்தில் இருந்தே, கிட் சியாங் நஜிப் மீது தாக்குதல் தொடுக்கும் ஒரு போக்கைக் கொண்டிருந்தார். ஆனால், நஜிப் பண்போடு அதனை பல சமயங்களில் நிராகரித்து வந்துள்ளார்.
“விவாதத்தை ஏற்றுக்கொள்வதாக நஜிப் விட்ட அறிக்கையானது, பிஎன் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பிஎச் ஆதரவாளர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. நாட்டில், அரசியல் சாணக்கியரான கிட் சியாங், நஜிப் விசயத்தில் தப்பு கணக்கு போட்டுவிட்டார். இன்று நஜிப், அதிகாரமும் பலமும் கொண்ட ஒரு பிரதமர் இல்லை என்பதை கிட் சியாங் மறந்துவிட்டார்,” என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அருட்செல்வன் கூறியுள்ளார்.
மலாய் மற்றும் சீன இனங்களுக்கிடையே மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, விவாதத்தில் தான் ஈடுபடபோவதில்லை என தனது அதிகாரபூர்வமான வலைப்பதிவில், கிட் சியாங் நேற்றிரவு அறிவித்தார்.
‘மலேசியா எப்படி ஓர் ஊழல் மிகுந்த நாடாக மாறியது, அதனை எவ்வாறு ஒரு நேர்மையான நாடாக மாற்றி அமைக்கலாம்’ என்ற தலைப்பில் விவாதிக்க நஜிப்பிற்கு கிட் சியாங் அழைப்பு விடுத்துள்ளார்.
“இந்தத் தலைப்பு ஒரு தலைபட்சமாக இருப்பதால், நஜிப் வரமாட்டார் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், தற்போது பொறுப்பில் இல்லாததால், நஜிப் இதில் கலந்துகொள்வதினால், அவருக்கு எந்தவொரு இழப்பும் இல்லை, தோற்றுப்போவதால் அவமானமும் ஏற்படப்போவதில்லை,” என அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.