பெருந் திட்டங்களை விட்டு சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுங்கள்: பினாங்கு அரசிடம் இளைஞர்கள் கோரிக்கை

கிளைமட் எக்சன் உத்தாரா மலேசியா(கவும்) அமைப்பின் இளம் ஆர்வலர்கள், பினாங்கு அரசு மெகா திட்டங்களில் பணத்தைக் கொட்டாமல் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மக்கள் திடீர் வெள்ளங்கள், மோசமான சாக்கடை வசதிகள், கட்டுப்படியாகாத வீடமைப்புகள், வீடில்லா நிலை போன்ற பிரச்னைகளை எதிர்நோக்குவதாக கவும் ஆர்வலர் நூர் சுலைகா சைனல் அபிடின் கூறினார்.

“அவர்கள்(அரசு) பினாங்கு போக்குவரத்துப் பெருந் திட்டம், தீவு மொத்தத்தையும் இணைக்கும் Pan Island திட்டம், தென் பினாங்கில் கடலைத் தூர்த்து நிலத்தை மீட்கும் திட்டம் போன்ற மெகா திட்டங்களில் பணத்தைக் கொட்டாமல் முன்சொன்ன விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்”, என்றாரவர்.