பிகேஆர், மாநில ஆட்சியாளர்களின் விருதுகள் பெறுவதற்கு அரசியல்வாதிகளின் பெயர்களைப் பரிந்துரைக்காது என அதன் தலைமைப் பொருளாளர் லீ சியான் சங் கூறினார்.
நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாம்.
நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பிகேஆர் ஒரு சீர்திருத்தக் கட்சி என்பதால் விருதுகள் பெறுவதற்கு யாருடைய பெயரையும் பரிந்துரைக்காது என்றுரைத்ததாக லீ தெரிவித்தார்.
“கட்சி அரசியலில் இறங்கியது பேருக்காகவோ புகழுக்காகவோ அல்ல என்பதையும் அவர் நினைவுறுத்தினார்”, என்றாரவர்.
இம்முடிவு குறித்து மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் அனைவரும் அறிவர் என்றும் லீ கூறினார்.
இதுதான் கட்சியின் முடிவு ஆனாலும், எங்களின் மக்கள் பிரதிநிதிகள் அல்லது கட்சி உறுப்பினர்கள் அரண்மனை வழங்கும் விருதைப் பெற விரும்பினால் அது அவர்களின் விருப்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மாநில சுல்தான்கள் எங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு விருதளித்துச் சிறப்பிக்க விரும்பலாம். அந்த விருதைப் பெறுவதா வேண்டாமா என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்”, என்றார்.