தடுப்புக் காவல் மரணங்களைக் கையாள வேண்டும், அரசாங்கத்திற்கு ராய்ஸ் யாத்திம் வலியுறுத்து

தடுப்புக் காவல் மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவர் ராய்ஸ் யாத்திம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எம் புருசோத்தமன் மரணம் தொட்டு பேசுகையில், தடுப்புக் காவல் அறைகளின் சூழலிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

“தடுப்புக் காவல் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

“அண்மையில், புருசோத்தமன் , 26, சுங்கை பூலோ சிறையில் மரணமடைந்தார். பெரும்பான்மையினரின் குரலுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும்.

“தடுப்புக் காவல் மையங்களில் சுத்தம், உணவு, மருத்துவ வசதி, இயல்பான அமலாக்க முறைகள் போன்றவை இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது,” என இன்று தனது டுவிட்டர் செய்தியில் ராய்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, ‘லோயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி’ (சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் குழு), நேற்று, தடுப்புக் காவலில் இறந்துபோன புருசோத்தமன் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டது.

சில நாட்களாகக் காச நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த புருசோத்தமன், சுயநினைவு இழந்தப் பின்னரே சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என அந்த அரசு சார்பற்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மலேசியாவில், சிறைச்சாலைகள் நிலைமை தொடர்பான பிரச்சனைகள், நீண்ட காலமாக சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருவதோடு, சிறைச்சாலைகளின் நிலையைப் புதுப்பிக்க வேண்டுமென அவர்கள் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.