முகநூலில் வைரலாகி வந்த தனித்து வாழும் தாயாரின் வீட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ஜொகூர் பி.எஸ்.எம். முயற்சி

கடந்த சில நாட்களாக, முகநூலில் வைரலாகி வந்த, தனித்து வாழும் தாயார் ஒருவரின் வீட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாண, ஜொகூர், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

பார்வதி குப்புசாமி, 37, ஜொகூர் பாரு, தாமான் முத்தியாரா ரினி அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளி செல்லும் தனது 2 பிள்ளைகள் மற்றும் வயதான தாயாருடன், கடந்த 2 ஆண்டுகளாகக் குடியிருக்கிறார்.

எதிர்வரும் மே மாத இறுதிக்குள், குடியிருக்கும் அந்த வாடகை வீட்டைக் காலி செய்ய வேண்டுமென வீட்டு உரிமையாளர் கூற, பிள்ளைகளுடன் எங்கு சென்று தஞ்சம் புகுவது என்று தெரியாமல் கலங்கியிருந்த வேளையில், சிலரின் ஆலோசனையின் படி, அந்த வீடியோ பதிவைச் செய்து, முகநூலில் பதிவேற்றியதாக பார்வதி கூறினார்.

“நான், கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து, வாங்கும் தகுதிக்குட்பட்ட வீடு (rumah mampu milik – RMM) மற்றும் அரசாங்க வாடகை வீட்டிற்கும் விண்ணப்பித்து வருகிறேன். ஆனால், பல காரணங்கள் கூறி, என் விண்ணப்பத்தை மாநில அரசு நிராகரித்து வருகிறது. இப்போது நான் தங்கியிருக்கும் வீட்டின் வாடகை, மாதம் RM 680, அதற்கும் ஆபத்து வந்துவிட்ட நிலையில், இன்னும் என்னைக் காத்திருக்கச் சொன்னால், நான் என் பிள்ளைகள் மற்றும் தாயாரோடு தெருவில்தான் தங்க வேண்டும்,” என பார்வதி வருத்தத்துடன் தெரிவித்தார்.

பார்வதியின் நிலையை அறிந்த ஜொகூர் பி.எஸ்.எம்., அவரை நேரில் சென்று கண்டு, உண்மை நிலையை அறிந்துள்ளனர்.

“வீடுகளின் விலை இன்று வானளவு உயர்ந்துவிட்டது. சாதாரண மக்கள் தங்களுக்கென ஒரு சொந்த வீட்டை வாங்க முடியாமல் அவதிபடுகின்றனர்,” என ஜொகூர் மாநில ‘அனைவருக்குமான வீட்டுரிமை’ பிரச்சார இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் பெரியசாமி கூறினார்.

“இவ்வாண்டு தொடக்கத்தில், ‘அனைவருக்குமான வீட்டுரிமை’ பிரச்சார இயக்கத்தைப் பி.எஸ்.எம். தேசிய அளவில் தொடங்கியது. ஜொகூரில் நாங்கள் இந்தப் பிரச்சார இயக்கத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினோம்.

“அதன்வழி, ஜொகூர் வாழ் மக்கள், சொந்த குடியிருப்புக்காகவும் குறைந்த வாடகையிலான அரசாங்க வாடகை வீடு பெறவும் பல இன்னல்களை எதிர்நோக்குவதை நாங்கள் அறிந்தோம்,” என மோகன் தெரிவித்தார்.

இன்று, ஜொகூர் மாநிலத்தில் இந்தப் பிரச்சார இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அடுத்த ஒரு மாதக் காலம் தொடரவிருக்கும் இப்பிரச்சார இயக்கத்தின் இறுதிநாளில், ஜொகூர் மாநில வீடமைப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினரிடம், இம்மாநில மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகளை முன்வைப்பதோடு, அதற்கு மாநில அரசு தீர்வுகாண வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளதாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

“சிங்கப்பூரைக் கருத்தில் கொண்டு, ஜொகூரில் வீடுகளின் விலையும் வாடகையும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. சிங்கப்பூரர்கள் அல்லது அந்த நாட்டில் வேலை செய்பவர்களுக்கு இந்த விலை கட்டுப்படியாகும். ஆனால், பார்வதியைப் போன்று, மலேசியாவில், குறைந்தபட்ச சம்பளமான RM 1,100-க்கு வேலை செய்பவர்களுக்கு இது வெறும் கனவுதான்,” என அவர் மேலும் கூறினார்.

கடந்த ஞாயிறன்று, ஜொகூர் மாநில மந்திரி பெசார் டாக்டர் ஷாருட்டின் ஜமால் மற்றும் வீடமைப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜுல்கிப்ளி அஹ்மட் இருவருக்கும், பார்வதியின் வீட்டுப் பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண வேண்டுமென ஜொகூர் பி.எஸ்.எம். கடிதம் அனுப்பியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று மாலை, இஸ்கண்டார் புத்ரி மாநகராட்சி மன்ற உறுப்பினர், அஸாம் மெக்தார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பார்வதியின் வீட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாண, சில ஆலோசனைகளைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

“இன்று ஜொகூரில் பலர், பார்வதியைப் போல் உயர்ந்த வாடகை செலுத்த இயலாமல் அல்லல்படுகின்றனர். இதில் இவர்கள் வீடுகள் வாங்குவது பற்றி யோசிப்பது எப்படி?” என்ற கேள்வியையும் ஜொகூர் பி.எஸ்.எம். முன்வைத்தது.