15-வது பொதுத் தேர்தலில், இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெற, ம.இ.கா. மறுசீரமைக்கப்பட்டு, பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) நிகராக உருவாக்கப்பட வேண்டும்.
பி.என். கூட்டணியில், இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சியான ம.இ.கா., பிற கட்சிகளில் இருக்கும் இந்தியத் தலைவர்கள் அக்கட்சியில் சேர அனுமதித்துள்ள செயலானது வரவேற்கத்தக்கது என அரசியல் பார்வையாளர் அன்புமணி பாலன் தெரிவித்தார்.
“சிறிய அரசியல் கட்சிகள், ம.இ.கா.வில் இணைய வாய்ப்பளிப்பதன் வழி, ம.இ.கா. அதனை மேம்படுத்திக்கொள்கிறது. கட்சி தலைமைத்துவத்தின் இச்செயலை நான் வரவேற்கிறேன்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய இந்தியர் ஒற்றுமை கட்சியைக் (மியூப்) கலைத்துவிட்டு, அதன் நிறுவனர் எஸ் நல்லக்கருப்பன் ம.இ.கா.வில் இணையவுள்ளதை, ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ் ஏ விக்னேஸ்வரன் உறுதிபடுத்தினார்.
“கட்சியில் இணைந்தவுடன், அவர்கள் இருவருக்கும் (நல்லக்கருப்பன் & கோகிலன் பிள்ளை) உயர் பதவிகள் கொடுக்கப்படும்,” என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“அதேசமயம், மக்கள் சக்தி கட்சி தலைவரும் பி.என்.னுக்கு ஆதரவான, முன்னாள் ஹிண்ராப்ட் ஆர்வலருமான ஆர் எஸ் தனேந்திரனுடனும் நாங்கள் கலந்துபேசவுள்ளோம்,” என அவர் மேலும் கூறினார்.
ம.இ.கா. மறுசீரமைக்கப்பட்டு, சமநிலையாக்கப்பட்டால், பிஎச்-க்கு சவாலாக ம.இ.கா.-வால் விளங்க முடியுமென அன்புமணி தெரிவித்தார்.
“கடந்த காலங்களில் நடந்த சில சம்பவங்களால், ம.இ.கா. மீது இந்தியர்களுக்கு கோபமே தவிர, அவர்கள் கட்சியை வெறுக்கவில்லை. இப்போது அவர்கள், ம.இ.கா.வுக்கும் பிஎச்-க்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை உணரத் தொடங்கிவிட்டனர்.
“ஆக, ம.இ.கா.-வை இப்போது சீரமைத்து, மேம்படுத்தினால், இந்தியர்களின் வாக்குகள் பி.என்.னுக்குத் திரும்ப அதிக வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.
உள்கட்சி சீரமைப்புகளால் பலனேதும் இல்லை என்ற அன்புமணி, ஒட்டுமொத்த சீர்திருத்தம் வேண்டும், இளைய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்றார்.
“இன்றைய சூழ்நிலையில் இந்தியர்கள், பி.என். அல்லது பி.எச். என்றில்லாமல், தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் எந்தக் கட்சியையும் ஆதரிப்பார்கள்,” என அன்புமணி கூறினார்.
கண் கெட்டா பின் சூரிய நமஸ்கரமா?
நல்ல தொடக்கம் என நினைக்கிறேன். அரசியலில் யெல்லாம் சகஜம்.