அம்னோ துணைத் தலைவர் முகம்மட் ஹசான், அம்னோ அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய முற்படுவது நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கும் தலைவர்களைக் கட்சியிலிருந்து கழட்டி விடும் திட்டம் என்று கூறப்படுகிறது.
முகம்மட்டும் அவரின் அணுக்கமான தோழரும் உதவித் தலைவருமான முகம்மட் காலிட் நோர்டினும் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய மிகவும் முனைப்பு காட்டுகிறார்கள் என ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் சில வட்டாரங்களை மேற்கோள்காட்டிக் கூறுகிறது. அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யும் பொறுப்பு காலிட்டிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்னோ நவம்பர் மாதம் அவசரப் பொதுக் கூட்டம் நடத்தி அமைப்புவிதிகளின் உட்பிரிவு 9.9-க்கு ஒரு திருத்தம் கொண்டுவர நினைப்பதாக ஒரு வட்டாரம் இம்மாதத் தொடக்கத்திலேயே மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தது.
அத்திருத்தம் கொண்டுவரப்படுமானால் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் அவருக்கு முன் தலைவராக இருந்த நஜிப் அப்துல் ரசாக்கும் இயல்பாகவே பதவி இழப்பர். நஜிப் இப்போது பெக்கான் தொகுதித் தலைவராக இருக்கிறார்.
ஆனால், திருத்தம் கொண்டு வருவதும் எளிதல்ல. அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய மூன்றில் இரண்டு பங்கு பேராளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அம்னோ பொதுப் பேரவை நவம்பர் 13-இலிருந்து 16வரை நடைபெறும்போதே அவசரப் பொதுக் கூட்டமும் நடத்தப்படும் எனத் தெரிகிறது