என்னுடன் வாதமிட துணிச்சலில்லை, என்னையா கோழை என்பது: கிட் சியாங்மீது நஜிப் பாய்ச்சல்

நஜிப் அப்துல் ரசாக்- லிம் கிட் சியாங் சண்டை ஓயாது போலிருக்கிறது. ஒருவர் மற்றவரைச் சாடுவதும் புழுதிவாரித் தூற்றுவதும் தொடர்கிறது. இன்று அது காலையிலேயே தொடங்கி விட்டது.

தொடக்கி வைத்தவர் லிம் கிட் சியாங். அதிகாலையிலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், நஜிப் இரண்டு நிகழ்வுகளிலும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலிலும் கலந்துகொள்ளாமல் “கோழைபோல்” பின்வாங்கியதை மக்களுக்கு நினைவுபடுத்தினார்.

இரண்டு நிகழ்வுகளில் ஒன்று 2015-ஆம் ஆண்டு அனைத்துலக ஊழல்-தடுப்பு மாநாடு(ஐஏசிசி), மற்றது 2017-இல் “ஒளிப்பதற்கு எதுவுமில்லை” கருத்தரங்கு. அதில் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் அவர் கலந்துகொள்வதாக இருந்தது.

இவை போக, கடந்த அக்டோபர் மாதம் அல் ஜசீரா தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நஜிப் நிகழ்ச்சியின் இடையிலேயே வெளிநடப்புச் செய்தார். பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

லிம் தம் அறிக்கையில், 2015-இல் அப்துல் கனி பட்டேயிலைச் சட்டத்துறைத் துறைத் தலைவர் பதவியிலிருந்து தூக்கியதற்காகவும் முகைதின் யாசினைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்தும் முகம்மட் ஷாபி அப்டாலை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கியதற்காகவும் நஜிப்புக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

லிம்மின் அறிக்கைக்கு எதிர்வினை ஆற்றிய நஜிப், இருவர் வாதமிடுவதற்கு லிம் ஒப்புக்கொண்டதாகவும் வாதத்துக்கான தலைப்பையும் அவரேதான் தேர்ந்தெடுத்தார் என்றும் சொன்னார்.

“வாதத்துக்கன கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தது யார்? அவர். நான் வாதத்துக்குத் தயாரா என்று கேட்டவர் யார்? அவர். வாதத்துக்கான தலைப்பை ஏற்றுக்கொண்டது யார்? அவர். கடைசியில் பின்வாங்கியது யார்? அவர்.

“இன்று கிட் சியாங் கூறுகிறார், அவருடன் வாதமிட எனக்குத் துணிச்சல் இல்லாமல் போய்விட்டது என்று. அவருக்கு என்ன பிரச்னை?”, என்று நஜிப் வினவினார்.

கடந்த வாரம் தொலைக்காட்சி வாதமொன்றுக்கு வரத் தயாரா என்று லிம்முக்குச் சவால் விடுத்த நஜிப், விவாதத்துக்கான தலைப்பை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

லிம்மும் ஒப்புக்கொண்டு தலைப்பையும் தேர்ந்தெடுத்தார். ஆனால், 48 மணி நேரத்தில் கலந்துகொள்ள இயலாது என்று கூறிப் பின்வாங்கினார். நஜிப்புடன் வாதத்தில் கலந்துகொள்வது நல்லதல்ல என்று அவரின் ஆதரவாளர்கள் ஆலோசனை தெரிவித்ததாலும் அந்த வாதம் இனப் பதற்றத்தை உண்டுபண்ணலாம் என்று தாம் நினைத்ததாலும் அதில் கலந்துகொள்ளவில்லை என்று லிம் கூறினார்.