2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய அதன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டு வரலாற்றிலும் அம்னோ வரலாற்றிலும் பல முக்கியமான அம்சங்களை எடுத்துக் காட்டியதுடன் எதிர்க் கட்சிகள் ஜனநாயாக ரீதியில் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்னோ தனது தலைவர்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்கு பெரும் எண்ணிக்கையிலான பேராளர்களை அனுமதிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை என்றார்.
“தங்கள் தலைவர்களைத் தேர்வு செய்ய அம்னோவில் உள்ள பலரை நாங்கள் அனுமதிக்கிறோம். எங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் ஜனநாயகத்தை கண்டு அஞ்சும் கட்சி அம்னோ அல்ல”, என்றார் அவர்.
“நாங்கள் எதிர்க்கட்சிகளைப் போன்றவர்கள் அல்ல. “ஓர் உணவின் சுவை அதனை சாப்பிட்டால்தான் தெரியும்” என்பது போல உண்மையில் அம்னோ ஜனநாயகத்தை பின்பற்றுகிறது.”
கடந்த ஆறு தசாப்தங்களாக அம்னோ நாட்டை வழி நடத்தி வருகிறது. அது நல்ல முறையில் செயல்பட்டுள்ளதற்கு பல சாதனைகள் உள்ளன என்றும் நஜிப் சொன்னார்.
“நாங்கள் மற்ற உறுப்புக் கட்சிகள் மீது ஒரு போதும் ஆதிக்கம் செலுத்தியது இல்லை. ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இல்லை.”
“நாங்கள் இனவாதக் கட்சி அல்ல. ஆனால் நாங்கள் தேசிய வளர்ச்சிக்காக உழைக்கிறோம்.”
எதிர்க்கட்சிகளைக் குறிப்பாக பிகேஆர் கட்சியையும் அன்வார் இப்ராஹிமையும் தாக்கிப் பேசிய நஜிப், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்படாத ஒருவரை அந்தக் கட்சி தலைவராகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
“அத்துடன் பிகேஆர்-ரில் அந்த மூத்த தலைவருடைய மனைவி கட்சித் தலைவர் ஆவார். அவர்களது மூத்த புதல்வி உதவித் தலைவராக இருக்கிறார். நாங்கள் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.”
டிஏபி பற்றியும் நஜிப் பேசினார். அந்தக் கட்சியின் பெயரில் மட்டும்தான் ஜனநாயகம் இருக்கிறது. ஆனால் அது ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை என நஜிப் சொன்னார்.
“ஒரு கிளைத் தலைவர்கள் 20 மத்தியக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். பின்னர் அந்த மத்தியக் குழு உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைவர்களை தேர்வு செய்கின்றனர்.”
“நிச்சயம் அது உறுப்பினர்களுடைய விருப்பத்தைப் பிரதிநிதிக்கவில்லை.”
பிரதமருமான நஜிப், பாஸ் கட்சி பற்றியும் பேசினார். அந்தக் கட்சி சமூக நல நாட்டுக்காக போராடுவதாகக் கூறிக் கொள்கிறது. ஆனால் அதன் ஆன்மீக ஆலோசகர் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்படவில்லை என்றார் அவர்.
“அந்த மனிதர் (ஆன்மீகத் தலைவர்) கட்சித் தலைவரை விட வலிமை வாய்ந்தவர்,” என்றார் நஜிப்.
“தலைமை தாங்கும் கட்சி என்னும் முறையில் அம்னோ மற்ற உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது. நாம் உண்மை நிலைக்கு ஏற்பவும் நடைமுறைக்கு இணங்கவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.”
“நாம் சுதந்திரம் பெற்றது முதல் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். நாட்டுக்கு மேம்பாட்டைக் கொண்டு வருவதில் நாம் பின்பற்றுகின்ற பாணி அதுதான்,” என நஜிப் குறிப்பிட்டார்.
“நாம் மக்களுடன் அணுக்கமாக இருக்க வேண்டும்”
சவால்கள் எதுவாக இருந்தாலும் அம்னோ வெற்றி பெறுவதை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள, சுதந்திரத்துக்குப் பின்னர் பிறந்த முதலாவது தலைவரான நஜிப் கூறினார்.
“நாம் மக்களுடன் அணுக்கமாக இருக்க வேண்டும். ஜனநாயக முறையில் இரண்டாவதாக வருவதற்கு இடமில்லை என்பதை அம்னோ உணர வேண்டும். நாம் வீரர்களாகத் திகழ வேண்டும்,” என்றார் அவர்.
இன்று நாடு பெற்றுள்ள வளங்கள் குறுகிய கால கட்டத்துக்குள் உருவாக்கப்பட்டப்பட்டவை அல்ல என்பதை நஜிப், பேராளர்களுக்கு நினைவுபடுத்தினார்.
“அது கவனமாக நிர்மாணிக்கப்பட்டது. பல போராட்டங்களும் சிரமங்களும் நிறைந்திருந்தன. மலாய்க்காரர்களாக, சீனர்களாக, இந்தியர்களாக , இபான்களாக, கடஸான்களாக, மற்றவர்களாக இருந்த நமது முன்னோர்கள் நாட்டை உருவாக்கினர்.”
“நம் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கமே அவர்களுடைய கனவாக இருந்தது. நமது பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு நடப்புத் தலைமுறையினரும் அதனைத் தொடருகின்றனர்”, என நஜிப் தொடர்ந்து கூறினார்.
“அவை அனைத்துக்கும் அம்னோவினால் கிடைத்தவை என்பதை நினைவில் வைத்திருங்கள். அந்தக் கட்சி மலாய்க்காரர்களுக்கு மட்டுமின்றி மற்ற இனங்களுக்கும் பங்காற்றியுள்ளது.”
அம்னோ ஆற்றியுள்ள பங்கை அழிப்பதற்கு மற்றவர்கள் விரும்பினால் அது காயத்தை ஏற்படுத்தாதா என அவர் வினவினார்.
“நாம் வரலாற்றை அழிக்க வேண்டும் என விரும்புகிறோமா? தங்கள் வாழ்க்கைக்கு எந்தப் பங்களிப்பையும் அம்னோ செய்யவில்லை என அவர்கள் கூறிக் கொள்கின்றன.”
“அப்படி என்றால் மலாயன் யூனியனை புதைத்தது யார்? அந்தக் கட்சி இல்லை என்றால் அமைதியாக சுதந்திரத்துக்குப் போராடியது யார்?” என்று அம்னோ தலைவர் மேலும் வினவினார்.