மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), கனவுந்து நிறுவனம் மற்றும் அதன் ஓட்டுநர்களிடம் கையூட்டு வாங்கிவந்த, இன்னும் அதிகமான சாலை போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) அதிகாரிகளைக் கைது செய்ய தயாராகிவருகிறது என ஆதாரங்கள் கூறுகின்றன.
இவ்வாண்டு ஏப்ரல் தொடக்கம், ஜேபிஜே உட்பட 79 தனிநபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது. அவர்களில் 9 பேர், கையூட்டு பெற்றதற்காக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
எம்ஏசிசி-யின் அண்மைய வேட்டையில், இந்த ஊழல் விவகாரங்களை எம்ஏசிசி-யிடம் அம்பலப்படுத்திய ஓர் அதிகாரியின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆதாரம் கூறுவதாக, தி மலேசியன் இன்சைட் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது கணவர், தனக்கு கொடுக்க வேண்டிய வாழ்வாதாரத்தை நிறுத்திவிட்டு, இன்னொரு திருமணம் செய்து கொண்டதை அறிந்த அந்த ஜேபிஜே அதிகாரியின் மனைவி, கடந்த மாதம் இந்த ஊழல் விவகாரத்தை எம்ஏசிசி-யில் புகார் அளித்தார்.
அதிகாரிகளில் 9 பேர், மாதா மாதம் RM10,000-லிருந்து RM32,000 வரை கையூட்டு பெற்றுக்கொண்டு, கனவுந்து ஓட்டுநர்களின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இவர்கள் ஜேபிஜே சம்பந்தப்பட்ட தகவல்களைக் கனவுந்து ஓட்டுநர்களிடம் வெளியிட்டும் வந்துள்ளனர்.
ஊழல் தகவல்களை வெளியிட்ட அதிகாரியின் மனைவி, அந்தச் சட்டவிரோத நிதி கணக்குகளுக்குப் பொறுப்பாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எம்ஏசிசி-யின் விசாரணையில், அந்தப் பணம் ஜேபிஜே உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதோடு, கோல்ஃப் விளையாடவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.