கல்வி அமைச்சர் ம்ஸ்லி மாலிக், சரவாக்கில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மரணமுற்ற செய்தி கேள்விப்பட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மிகவும் வருத்தமுற்றேன். என் சோகத்தை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
“ச்சேகு யாப், உங்களுக்கு நன்றி”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.
சிபு எம்பி ஒஸ்கார் லிங்கின் மைத்தினியான யாப் ஹியு லிங், 47, பள்ளியில் கூடுதல் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவர், மே 27-இல் சிபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கவனிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நினைவு திரும்பாமலேயே நேற்றுக் காலை காலமானார்.
யாப்பின் குடும்பம் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக லிங் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை மஸ்லி, பள்ளி விடுமுறையை ஆசிரியர்களும் மாணவர்களும் ஓய்வெடுப்பதற்காகவும் அவர்களின் குடும்பத்தாருடன் பொழுதைக் கழிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் விடுமுறை காலத்தில் பள்ளி நடவடிக்கைகளை நடத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
ஆனால், யாப் வகுப்பு நடத்தியதற்கும் பள்ளிக்கும் தொடர்பில்லை என்றும் அவர் சொந்த முயற்சியில் மாணவர்களுக்கு மெண்டரின் கற்பித்துக் கொண்டிருந்தார் என்றும் சக ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். அப்படி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தபோதுதான் மயங்கி விழுந்தார் என்றாரவர்.
டிங் லியுங் ஈ தன்னுடைய முகநூல் பக்கத்தில் யாப் “ஒரு நல்ல ஆசிரியர், பொறுப்பானவர்” என்று வருணித்தார்.
சரவாக் ஆசிரியர் சங்கத்தின் சிபு கிளைத் தலைவர் யோங் சை ஹிங், கூடுதல் வகுப்பு நடத்தும்படி யாரும் யாப்-பைக் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.