‘மோசடியில் எனக்குச் சம்பந்தமில்லை’ புக்கிட் காசிங் பிரதிநிதி போலீசில் புகார்

புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் சிஷ்யகரன், தன் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் ஒரு நபருக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். அந்நநபர், ராஜிவ் மூலமாக அரசாங்கத்தில் காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என்று கூறிப் பணம் வசூலித்துக்கொள்கிறாராம்.

மலேசியாகினியின் பார்வைக்கு வந்த ஒரு போலீஸ் புகாரில் ராஜிவ் அந்த மோசடிச் செயல்களில் தமக்குத் தொடர்பில்லை என்று மறுத்திருந்தார்.

“பொறுப்பற்ற காரியங்களைச் செய்வதற்கு என் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறேன் அதனால்தான் இப்புகாரைச் செய்கிறேன்.

“எனக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன், நான் பணம் எதுவும் வாங்கவில்லை.

“போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்”, என்றந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இன்று காலை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தில் அவர் அப்புகாரைச் செய்துள்ளார். அப்புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: நேற்று ஒருவர் ராஜிவ் அலுவலகம் வந்து, மேற்படி நபர் பெட்டாலிங் ஜெயா மாநராண்மைக் கழகத்திடமிருந்து வியாபார லைசென்ஸ் ஒன்றைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததால் அதற்காக அவரிடம் ரிம62,900 கொடுத்ததாகத் தெரிவித்தார்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி லைசென்ஸ் வந்து சேரவில்லை.

மேல்விவரம் அறிய ராஜிவ்வைத் தொடர்புகொண்டு பேசியதற்கு, ஏமாற்றப்பட்டதாகக் கூறிக்கொண்டிருப்பவர் இரண்டாவது போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளார் என்றார்.

“இது எனக்குப் பிடிக்காத செயல். போலீஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.