ஜோ லோ குறித்து வதந்திகள் பரப்பாதீர், அது அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைப் பாதிக்கும்- காடிர்

சட்டத்தின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவுள்ள தொழில் அதிபர் லோ தய்க் ஜோ அல்லது ஜோ லோ கைது செய்யப்பட்டார் என்பது போன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறூத்த வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின்.

தவறான தகவல்கள் அவரைப் பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் மறைவான நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றாரவர். 1எம்டிபி நிறுவனத்த்ஜிலிருந்து பல பில்லியன்-ரிங்கிட்டைக் கையாடிய குற்றத்துக்காக ஜோ லோவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“ஜோ லோ பிடிக்கப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே நம்மில் பலரது விருப்பமுமாகும். ஆனால், தவறான தகவல்களைப் பரப்புவதன்வழி தப்பான நம்பிக்கைகள் எழ இடமளித்து விடாதீர்கள்.

“உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பொய்யான செய்திகளும் ஜோ லோ-வைப் பிடிப்பதற்காக இரகசியமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குக் குந்தகமாக அமைந்து விடலாம்”, என்று காடிர் அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டார்.