வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டுவர பிரதமர் உதவ வேண்டும்- மைக்கி
பெயரிலி 770241447347646: மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் கூட்டமைப்பு (மைக்கி) வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
அவர்கள் கூறுவதுபோல் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுமானால் அதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.
அதேவேளை, அரசாங்கம் இங்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளையும் ஆராய வேண்டும். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வழக்கமாக எதிர்நோக்கும் பிரச்னைகள்: நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பது, சிலர் வாரத்துக்கு ஏழு நாளும் வேலை செய்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை நிலைமை எப்படி உள்ளது என்பதையும் ஆராய வேண்டும். இடமிடைஞ்சல் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே அறையில் அல்லது ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும்படி க்ட்டாயப்படுத்தப்படுகிறார்களா? நோயின் காரணமாக வேலைக்கு வராவிட்டால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறதா?
பணக்காரர்களாகும் மோகத்தில் நாம் ஈவிரக்கம்ற அரக்கர்களாக மாறிவிடக் கூடாது. அவர்களிடம் மனிதாபிமானம் காண்பிப்போம். குடும்பத்தைப் பிரிந்து, முகவர்களுக்குப் பெரும்பணத்தைக் கட்டணமாகக் கொடுத்து பல தொல்லைகளுக்கும் ஆளாகி இங்கு வந்துள்ள அவர்களை வசதியாக வைத்திருப்போம்.
அவர்களின் மனவேதனைகள் அதிகரிக்க நாம் காரணமாக இருக்கக் கூடாது.
பெயரிலி 122233: போதும், போதும், மலேசியாவில் ஏற்கனவே நிறைய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர்.
அந்நிய தொழிலாளர் எண்ணிக்கை மேலும் பெருகாதிருக்க தொழில் அதிபர்களும் வர்த்தகர்களும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட விகிதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைக்க வழிகாண வேண்டும்.
ரெம்பிராண்ட்: முன்னாள் கைதிகள் 32,000 பேர் வேலை தேடிக் கொண்டிருப்பதாக சிறைச்சாலைத் துறை அறிவித்துள்ளது. அவர்கள் ஒரு புது வாழ்க்கை தொடங்க உதவலாம். அந்த வகையில் இந்திய வர்த்தகர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
இந்திய உணவகங்களில் வேலையாள்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறவும், மேசைகளைச் சுத்தப்படுத்தவும் உணவுத் தட்டுகளைக் கழுவவும் காய வைக்கவும் முதலிய வேலைகளுக்குத்தான் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்ததோ அதுதான் இன்னமும் நடக்கிறது.
இதற்காக மேலும் ஒரு 50,000 அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது வேண்டாத செயல். இதை நிறுத்த வேண்டும். நமது முன்னாள் கைதிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.
டோப்பிஸ்டர்ன்: நாட்டுக்குள் கள்ளத்தனமாக வந்தவர்களும் அகதிகளாக வந்தவர்களும் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்குச் சட்டப்பூர்வமான ஆவணங்களைக் கொடுத்து இந்த வேலைகளைச் செய்ய அவர்களை அமர்த்திக் கொள்ளலாம்.
ஆர்கேஆர்: இந்தியர்களில் எத்தனையோ பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்களே, இந்த வர்த்தகர்கள் அவர்களுக்குத் தக்க பயிற்சி அளித்து தத்தம் தொழில்களில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே.
நல்லதுக்காக மாற்றம்: பக்கத்தான் ஹரப்பானுக்கு ஒரு எச்சரிக்கை. மலிவான தொழிலாளர்களைத் தொடர்ந்து தருவித்துக் கொண்டிருந்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
அதன் சமூக- பொருளாதாரத் தாக்கத்தைத் தெளிவாகவே பார்க்கிறோம். முன்பு ஒழித்துக்கட்டப்பட்ட நோய்கள் இப்போது திரும்பி வந்து விட்டன. குற்றச் செயல்கள் பெருகி விட்டன, மக்கள்தொகைச் சமச்சீர் நிலையும் மாற்றம் கண்டிருக்கிறது.
குறைவான சம்பளத்தால் நாடு வெற்றிகரமாக போட்டிபோட முடிகிறது என்ற தப்பான நம்பிக்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் வளர்ந்த நாடாகும் நமது நோக்கத்தில் பின்னடைவைத்தான் காண நேரும்.
கொக்கோமோமோ: உண்மை. கூடுதல் சம்பளம் கொடுத்து உள்நாட்டுத் தொழிலாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். மலிவாகக் கிடைக்க்கிறார்கள் என்பதற்காக அந்நிய தொழிலாளர்களையே நம்பி இருக்கக் கூடாது.