புத்ரா ஜெயா, தேசிய பீட்லோட் மைய(என்எப்சி)த் திட்டத்துக்கு வழங்கிய ரிம253 மில்லியனைத் திரும்பப் பெற அம்னோ முன்னாள் மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலிலின் கணவர்மீதும் அவரின் மூன்று பிள்ளைகள்மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது.
என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், அவரின் பிள்ளைகள் என்எப்சி முன்னாள் தலைமை செயல் அதிகாரி வான் ஷாஹினுர் இஸ்ரான், அதன் இயக்குனர்களான வான் இஸ்ஸானா பாத்திமா ஸபேடா ஆகியோர் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எதிர்வாதிகள் பட்டியலில் அக்குடும்பத்தாருக்குச் சொந்தமான ஆறு நிறுவனங்களும் இடம்பெற்றிருப்பதாக வணிக நாளேடான த எட்ஜ் கூறியது.
கடனைத் திருப்பிச் செலுத்த சாலே குடும்பத்தாரே பொறுப்பு என்று நீதிமன்றம் அறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம், 2007 டிசம்பரில் இறைச்சிக்காக மாடுகளை வளர்க்கும் திட்டத்துக்காக தேசிய பீட்லோட் மையத்துக்குச் சலுகை அடிப்படையில் ரிம250 மில்லியன் கடன் கொடுத்தது.
சாலே குடும்பம் அதிலிருந்து ரிம180.51 மில்லியனை எடுத்து அந்த நிறுவனத்துக்கு ரிம8.32 மில்லியனைக் கொடுத்து விட்டு ரிம118 மில்லியனை அமுக்கிக் கொண்டதாக தெரிகிறது.
அத்திட்டத்தின்மீது நடத்தப்பட்ட தணிக்கையில் அது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையவில்லை என்பது தெரிய வந்தது. முகம்மட் சாலேமீதும் விசாரணை நடத்தப்பட்டு அவர் ரிம49.7 மில்லியனை நம்பிக்கை மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால், 2015-இல் அவர்மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன.