வேலை இடங்களில், மெண்டரின் மொழி தெரியாத வேலையாட்கள் தொடர்பான குற்றச்சாட்டில், மலாய் மற்றும் சீன வணிக சமூகங்கள் மாறுபட்ட கருத்து கொண்டுள்ளன.
மலாய் பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (எம்.டி.இ.எம்.) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் யாஜித் ஒத்மான் கூறுகையில், இந்தப் பாகுபாடு இயல்பாக நடந்துவருவது உண்மை, அது தொடர்பில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
“இந்தப் பிரச்சினை கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது, அது (பாகுபாடு) நடப்பது உண்மை.
“மலாய்காரர்களுக்கு மெண்டரின் தெரியாது என்பது மட்டும் காரணமல்ல, சில நிறுவனங்கள் சீன தொழிலாளர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கின்றன.
“சில தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் மலாய்க்காரர்களுக்குப் பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ கிடைப்பதில்லை,” என மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கடந்த மே 16-ம் தேதி, இனப் பாகுபாடு மெட்ரிகுலேசனில் மட்டுமல்ல, வேலை இடங்களிலும் நடக்கிறது என கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் கூறியிருந்தார்.
இதற்கிடையில், மலாய் வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் (பெர்டாசாமா) சங்கத்தின் துணைத் தலைவர் சோஹைமி ஷாஹாடான் இந்தப் பாகுபாடு ஒரு முடிவற்ற பிரச்சினையாகவே உள்ளது என்று கூறினார்.
“இது தொடர்பில் பல ஆய்வுகள் நடந்துள்ளன, பட்டதாரிகளிடம் இருந்து எங்களுக்கு நிறையப் புகார்கள் வந்துள்ளன.
“அனைத்து தரப்பினரும், ஒரே மேஜையில் அமர்ந்து, அனைவரின் நலனுக்காகவும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க கலந்து பேச வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.
சுற்றுலாத் துறையில் குறைவு
இதற்கிடையில், மலேசிய-சீன வர்த்தக சம்மேளனம் (எம்சிசிசி), மெண்டரின் பேசத் தெரியாத விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பத்தை, அதன் உறுப்பினர்கள் நிராகரிக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளது.
எம்சிசிசி-யில், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் உறுப்பியம் பெற்றுள்ளன.
“நாங்கள் அவர்களிடம் இருக்கும் திறமையை மட்டுமே பார்க்கிறோம்,” என அதன் பொருளாலர் தேய் பெங் ஹோங் தெரிவித்தார்.
“ஆங்கிலம் மற்றும் மெண்டரின் தேவை இருக்கும் துறைகளுக்கு அத்தகைய நிபந்தனைகள் இருக்கின்றன. எனது கட்டுமான நிறுவனத்தில், 3 மலாய்க்காரர்கள் மேற்பார்வையாளர்களாக இருக்கின்றனர்.
“மெண்டரின் பேசும் தொழிலாளர்கள் எங்களுக்குத் தேவையில்லை, ஏனெனில் எங்கள் வணிகப் பங்காளிகள் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள்,” என்று கூறிய அவர், தனது நிறுவனத்தில் 60 விழுக்காடு ஊழியர்கள் பூமிபுத்ராக்கள் என்றார்.
மலேசிய-சீன சுற்றுலா சங்கத் தலைவர், அல்பர்ட் தான், சுற்றுலாத் துறைக்கு பல மொழிகள் தெரிந்தவர்கள் தேவை என்றார். அதில், மலாய்க்காரர்களின் ஈடுபாடு மிகக் குறைவாகவே (10 – 30 விழுக்காடு) உள்ளது என்றும் அவர் சொன்னார்.
மலாய்க்காரர்கள், தங்கள் இனம் சார்ந்த முதலாளிகளிடம் வேலை பார்க்கவே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில், அம்னோ தலைவர்களுடன் தொடர்பு உள்ள நிர்வாக – அரசியல் ஆய்வு மையம், தனியார் துறைகளில் மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகக் கூறியுள்ளது.