லத்திபா நியமனத்தில் ஏதேச்சதிகாரப் போக்கு, இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல- பெர்சே

தேர்தல் சீரமைப்புக்காகப் போராடும் என்ஜிஓ-வான பெர்சே, பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தன்மூப்பாக லத்திபா கோயாவை எம்ஏசிசி தலைவராக நியமித்த செயலைக் குறைகூறியுள்ளது.

“அந்நியமனம் நிர்வாகக் கட்டமைப்பில் பலவீனம் நிலவுவதையும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் காட்டுவதாக பெர்சே நினைக்கிறது.

“….நடப்புச் சட்டங்கள் யாரை நியமிப்பது என்று பேரரசருக்கு ஆலோசனை கூறும் உரிமையைப் பிரதமருக்கு அளிக்கின்றன என்றாலும் ஒட்டுமொத்த அதிகாரம் பிரதமரின் கைகளில் இருப்பது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

“முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் இதே அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் 1எம்டிபி ஊழல் விசாரணையிலிருந்து தப்பித்து பதவியை விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் முயற்சியாக தமக்கு வேண்டியவர்களை முக்கிய பதவிகளில் நியமனம் செய்தார்”, என பெர்சே அறிக்கை ஒன்றில் கூறியது.

லத்திபா கோயா நியமனம் குறித்து அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதை மகாதிர் நேற்று ஒப்புக்கொண்டார்.