மலேசிய வழக்குரைஞர் மன்றம், லத்திபா கோயா எம்ஏசிசி தலைவராக நியமனம் செய்யப்பட்ட விதத்தில் அதிருப்தி அடைந்துள்ளது.
மனித உரிமைகளுக்காக போராடுவதில் பெயர்பெற்றுள்ள அவ்வழக்குரைஞருக்கு சட்ட அமலாக்கத் துறையில் போதிய அனுபவம் இல்லை, அவர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் ஆவார். இந்நிலையில் அவரை அப்பதவிக்கு நியமித்தது சரிதானா என்றும் அது கேள்வி எழுப்பியது.
அவரை நியமிக்கும் முன்னர் முக்கிய பதவிகள் நியமனம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்படாதது ஏன் என்றும் வழக்குரைஞர் மன்றத் தலைவர் அப்துல் பாரிட் அப்துல் கபூர் ஓர் அறிக்கையில் வினவினார்.
நேற்று மகாதிர் எம்ஏசிசி தலைவரை நியமனம் தொடர்பில் தாம் யாருடனும் அலோசனை கலக்கவில்லை என்றும் அது தாமே செய்த முடிவு என்பதையும் ஒப்புக்கொண்டார்.
மேலும், அவர் பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் அரசியல்வாதிகள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட மாட்டார்கள் என்று கொடுத்திருந்த வாக்குறுதியையும் அது “நியாமற்றது” என்று கூறி ஒதுக்கித் தள்ளினார்.
அதை பாரிட் ஏற்கவில்லை. ஹரப்பான் அரசு அதன் தேர்தல் அறிக்கையைப் பின்பற்றி அரசியல் நியமனங்கள் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
“ஒரு அரசியல் (பிகேஆர்) கட்சி உறுப்பினரான லத்திபா வரப்போகும் நியமனம் பற்றித் தெரிவிக்கப்பட்டு நியமனத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து விலகிக் கொண்டிருந்தாலும் அது, அவரது நியமனம் அரசியல் சார்புள்ளது என்பதை மாற்றிவிடப்போவதில்லை. .
“அரசியல்வாதிகளை முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்த காலம், என்று மலேசியர்கள் அரசாங்கத்தில் மாற்றம் வேண்டுமென வாக்களித்தார்களோ அந்த 2018, மே 9-இல் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்”, என்றாரவர்.