முதன்முறையாக, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் முகம்மட் சுக்ரி அப்துல், ஒப்பந்த காலம் முடியும் முன்னரே பணிவிலகியது ஏன் என்று விளக்கமளித்துள்ளர்.
பணி விலகியது சுயமாக எடுத்த முடிவு என்றாரவர்.
“என் ஒப்பந்த காலத்தைக் குறைத்துக்கொண்டது நானாக செய்த முடிவு. ஆனால், முக நூல் போன்ற சமூக ஊடகங்களில் அது தொடர்பாக எதிர்மறை கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
“நான் பணியிலிருந்து விலகிக் கொள்ளவில்லை. 2020 மே 13-இல் முடிவடையும் என்னுடைய சேவைக் காலத்தைக் குறைத்துக்கொண்டேன், அவ்வளவே.
“நான் (கடந்த ஆண்டு மே 14-இல் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைச் சந்தித்தபோதே) ஓராண்டுதான் பணியாற்றுவேன் என்பதைத் தெரிவித்து விட்டேன்”, என இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
முக்கிய புள்ளிகள்மீதான வழக்குகளை ஊற்றி மூடிவிட்டதாகவும் அதனாலேயே பதவி விலகுமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் சிலர் குற்றஞ்சாட்டியிருப்பதை முகம்மட் சுக்ரி மறுத்தார்.
“ஹிஷாமுடின் (உசேன்), ஷரிசாட் (அப்துல் ஜலில்), (அஹமட்) ஜாஹிட் ஹமிடி ஆகியோர் மீதான வழக்குகளை நான் மூடி மறைத்து விட்டதாகக் கூறுகிறார்கள்.
“எனக்குத் தெரிந்தவரை நான் எம்ஏசிசி தலைவராக இருந்த காலத்தில் ஹிஷாமுடினுக்கு எதிராக எந்தவொரு விசாரணை கோப்பும் திறக்கப்படவில்லை. ஷரிசாட் அல்லது என்எப்சி வழக்கு விசாரணையைச் செய்தது போலீஸ், எம்ஏசிசி அல்ல.
“ஜாஹிட்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.