14 ஓராங் அஸ்லிகள் இறப்புக்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள்! இயற்கையைப் பாழாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள்! – புத்ராஜெயாவுக்குப் பி.எஸ்.எம். வலியுறுத்து

பிரதமர் துறை அமைச்சர் பொ வேதமூர்த்தி, சுகாதார அமைச்சுடன் இணைந்து, 14 ஓராங் அஸ்லிகளின் இறப்புக்கான காரணத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வலியுறுத்தியுள்ளது.

குவா மூசாங், கோலா கோ-வில், மரணமுற்ற அந்த 14 ஓராங் அஸ்லிகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிவதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து, பி.எஸ்.எம். ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

அக்கிராமத்திற்குள் நுழைய பொது மக்களுக்குத் தடை விதித்திருக்கும் சுகாதார அமைச்சு, முறையான ஆய்வுகள் இன்றி முன்னெடுக்கப்படும், பெரிய அளவிலான விவசாயம், சுரங்கத் தொழில் மற்றும் மேம்பாடு என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் தடை செய்ய வேண்டும் என அக்கட்சியின் தலைமை செயலாளர் ஆ சிவராஜன் தெரிவித்தார்.

“சுற்றுச் சூழலைச் சூரையாடும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தாமல், மக்களுக்குத் தடைவிதிப்பதால் மட்டும் என்ன நன்மை ஏற்படபோகிறது,” என அவர் கேள்வி எழுப்பினார்.

“நோய்க்கான உண்மை காரணத்தைக் கண்டறிய, மருத்துவர்கள் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் இலாகா, இரசாயணத் துறை மற்றும் காவல்துறையின் தடயவியல் நிபுணர்களுடன் ஓராங் அஸ்லி ஆர்வலர்களையும் இணைத்து, ஒரு பணிக்குழுவை அமைக்க வேண்டுமென நாங்கள் புத்ராஜெயாவுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

“இயல்பாக, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வரும் ஓராங் அஸ்லி சமூகம், இயற்கையால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,” என அவர் மேலும் சொன்னார்.

2016-ம் ஆண்டு முதல், குவா மூசாங் லோஜி பகுதியில், ஓராங் அஸ்லி சமூகத்துடன் பி.எஸ்.எம். இணைந்து வேலை செய்து வருவதாகவும், விவசாயம், செம்பனை தோட்டங்கள், சுரங்கத் தொழில் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளால், அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக, ஏற்கனவே பல போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“நீர், உணவு மூலங்கள் அல்லது சுற்றுச்சூழலில் மாசு ஏற்படும் நடவடிக்கைகளால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

“பல காலமாக இயற்கையை வணிகரீதியாக அழித்துவரும் எந்தத் தரப்பினருக்கும் சார்பாக இல்லாமல், புத்ராஜெயா, நேர்மையாகவும் நியாயமாகவும் இந்த விஷயத்தைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

“இத்தகையப் பொருளாதார நடவடிக்கைகளால், ஒராங் அஸ்லி சமூகம் மற்றும் அவர்தம் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விரிவான ஆய்வுகள் மூலமே, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்,” என அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.