ஒப்பந்தத் துப்புரவாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்க, மஸ்லிக்கு பி.எஸ்.எம். அழைப்பு

தனது அமைச்சின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறியுள்ள கல்வியமைச்சர் மஸ்லி மாலிக்-ஐ மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) பாராட்டியுள்ளது.

இருப்பினும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண, கல்வி அமைச்சர் மஸ்லி மாலேக் மட்டுமின்றி, நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் எம் குலசேகரன் ஆகியோருடனான கூட்டு முயற்சியின் மூலமே முடியுமென அக்கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் கூறியுள்ளார்.

“அம்னோ-பிஎன் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட, இந்த ஒப்பந்தத் தொழிலாளர் முறைமையே அனைத்து சிக்கல்களுக்கும் மூல காரணம். பினாமிகளின் விசுவாசத்தைப் பெற்றதற்கு, தங்களின் நன்றியுணர்வை வெளிபடுத்தும் வகையில், இந்தக் குத்தகைகளை அவர்களுக்கு வழங்கினர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தை ஏற்கனவே நாங்கள் அமைச்சரிடம் பேசியுள்ளோம். இதற்கு தீர்வுகாண ஒரே வழி, பழைய முறைக்குத் – மீண்டும் ஒரு நிலையான விகித முறையின் கீழ், பள்ளிகள் தங்கள் தொழிலாளர்களை நிர்வகிக்கும் முறை – திரும்புவதே.”

பழைய முறையின் கீழ், தொழிலாளர்களுக்குச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தரநிலைகளாலும் மத்திய அரசியலமைப்பினாலும் நிர்ணயிக்கப்பட்ட வேலை உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என அருட்செல்வன் கூறினார்.

“இதற்கு மாற்றாக, ஒரு சீரமைப்பைச் செய்ய வேண்டியது அவசியம், ஆனால், அதற்கு அதிக காலம் எடுக்கும் என்பதும் எங்களுக்குப் புரிகிறது.

“ஆனால், ஒரு காலக்கெடுவை இப்பிரச்சனைக்கு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும், ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் கைமாறும் போது, இதேப் பிரச்சனை நீடிக்காமல் இருக்க.

நிரந்தர மற்றும் நீண்ட கால வேலை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது, ஒழுக்க முறையிலும் சட்டபூர்வமாகவும் தவறானது என அருட்செல்வன் சாடினார்.

“தற்போது முக்கியப் பிரச்சினை, 45,000 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாகக் கூறப்படுவது,” என்று அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அவர் சொன்னார்.

“ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் வேலைகளையும் ஊதியங்களையும் திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய, நிதி அமைச்சர் கூடுதல் நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

“இப்பிரச்சனைக்கு முறையான தீர்வு கண்டுபிடிக்கப்படும் வரை, இதற்கு முன்னர் பணியில் இருந்த அனைத்து ஒப்பந்த ஊழியர்களும், 24 மணிநேர அறிவிப்புடன் வேலை நீக்கம் செய்யப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.”

அதுமட்டுமின்றி, ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமல் அல்லது வேலை நீக்க பயன்கள் ஏதும் கிடைக்காமல் அவதிபடும் – நாங்கள் அவர்களை வேலையில் இருந்து நீக்கவில்லை, அவர்களின் குத்தகை முடிந்துவிட்டது என ஒந்தக்காரர்கள் கூறும் – தற்போதைய பணியாளர்களின் பிரச்சினைகளிலும் மஸ்லி கவனம் செலுத்த வேண்டும்.

“அவர்கள் (தொழிலாளர்கள்) ‘தொழிலாளர்கள் காப்புறுதித் திட்டத்திற்கு’ (EIS) விண்ணப்பிக்க முடியாது, ஏனெனில் இதைப் பெறுவதற்கு, அவர்கள் பணி நீக்கக் கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும், ஆனால், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் அத்தகையக் கடிதத்தை வெளியிடமாட்டார்கள்.

“ஆக, இந்த முக்கியப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாண, அமைச்சுகளுக்கு இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு இதுவே சரியான நேரம்.

“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமும் கல்வி அமைச்சும், B40 குழுவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவே, அவர்களின் கொள்கைகள் இயங்குகின்றன எனக் கூறியுள்ளனர். ஆக, சொன்னதைச் செய்ய வேண்டிய காலம் கனிந்துவிட்டது.”