அமைச்சருடன் பல தடவை ‘தனித்திருந்தது’ உண்டு- ஹசிக்

சந்துபோங் பிகேஆர் தொகுதி இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் ஹசிஸ், பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியுடன் பல தடவை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது உண்டு என்று திரும்பவும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை முகநூலில் பதிவிட்டிருந்த அவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அக்காணொளி பொய்யானது என்று குறிப்பிட்டிருப்பது பற்றியும் கருத்துரைத்துரைத்திருந்தார்.

“என்னுடைய சத்திய வாக்குமூலத்துக்கு (நேற்று வெளியிடப்பட்டது) ஆதரவு அளிக்காதது சீரமைப்புக்காக போராடுவதாகக் கூறும் நமது புதிய அரசாங்கத்தின்மீதே சந்தேகம் கொள்ள வைக்கிறது.

“நான் ஏதோ அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக பிரதமரே என்மீது குற்றம் சாட்டுகிறார்” என்றவர் சொன்னார்.

அஸ்மினின் அரசியல் செயலாளர் ஹில்மான் இதாம் மரியோட் புத்ரா ஜெயாவில் தன்னைச் சந்தித்ததாகவும் ஹசிக் கூறினார். அமைச்சர் பற்றிக் கூறியதை மறுத்து அறிக்கை விடுமாறு அவர் கட்டாயப்படுத்தினாராம்.

“நான் காணொளியில் சொல்லியிருந்ததை மறுத்து பொய்யுரைக்குமாறு என்னைக் கட்டாயப்படுத்தினார்,

“நான் மறுத்ததும் ‘இது’ என்னுடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் 48மணி நேரத்தில் நீக்கப்படும் என்று மிரட்டினார்”, என்றும் சொன்னார்.

ஓட்டல் அறையில் நடந்ததையெல்லாம் அஸ்மின்தான் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் ஹசிக் கூறினார். தங்களுக்குள் ஓரினச் சேர்க்கை நடந்தது இது முதல் முறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

“முதலில், மூன்றாண்டுகளுக்குமுன் கிராண்ட் கொண்டினெண்டல் கூச்சிங்கில் நடந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் கட்சித் தேர்தலின்போது புல்மன் கூச்சிங்கில், இவ்வாண்டு மார்ச் மாதம் புருணை சுல்தானுக்கு அவர் உடன் செல்லும் அமைச்சராக இருந்தபோது கிராண்ட் ஹையாட் கேஎல்-இல், ஆகக் கடைசியாக கடந்த மாதம் ஃபோர் போயிண்ட்ஸ் சண்டகானில்”, என்றவர் பட்டியலிட்டார்.

முதன்மைத் தொழில்கள் துணை அமைச்சர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகினின் மூத்த தனிச் செயலரான ஹசிக், மேலும் காணொளிகள் வெளிவரலாம் என்றும் கவலைப்படுகிறார்.

நேற்று, அஸ்மின் அலி அந்த ஆபாச காணொளியில் இருப்பது தான் அல்ல என்று மறுத்தார். அது தன்னுடைய அரசியல் வாழ்க்கையைக் குலைப்பதற்கு நடக்கும் சதி என்றவர் வருணித்தார்.

பிரதமர் மகாதிரும் அது உண்மையான காணொளி அல்ல என்றும் அரசியல் நோக்கத்துடன் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்றும் கூறினார்.