புதிய ஊடகங்கள் உட்பட அரசியல் வடிவமைப்பில் நுழைந்துள்ள புதிய ஆட்டக்காரர்களை அம்னோ உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கட்சிக்கு துயரம் காத்திருக்கிறது என அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார்.
அம்னோ வரலாற்றில் மிகவும் கடுமையான பொதுத் தேர்தலை அந்தக் கட்சி எதிர்நோக்கியுள்ள வேளையில் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
அந்தப் புதிய ஆட்டக்காரர்களை அம்னோ புரிந்து கொள்ளத் தவறி நமது போராட்டத்துக்கு மறுவடிவம் கொடுக்காமல் போனால் நாம் பேரிடராகி விடுவோம்,” என அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிறைந்திருந்த 5,000 பேராளர்களிடம் நஜிப் கூறினார்.
அந்த ‘புதிய ஆட்டக்காரர்கள்’ மூன்று வகையானவர்கள் என விவரித்த அவர், புதிய ஊடகங்கள், புதிய அரசியல் உண்மை நிலை, வாக்காளர்களுடைய புதிய சிந்தனைகள் ஆகியவையே அவை என்றார்.
“தேசிய அரசியல் வடிவமைப்பில் உருவாகியுள்ள புதிய உண்மை நிலைகளை அம்னோ புரிந்து கொள்ளா விட்டால் அம்னோவும் பிஎன் -னும் எப்படி வெற்றி காணப் போகின்றன?”
புதிய ஊடகங்கள் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயம் செய்யும்
“இரண்டாவதாக புது ஊடகங்கள். நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அம்னோ அந்தப் புதிய ஊடகங்களின் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும். காரணம் இன்றைய சூழலில் அவை வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயம் செய்கின்றன. அவை ஆட்டக்களத்தை சமநிலையாகவும் மாற்றலாம். போரை சமநிலையற்றதாகவும் மாற்றவும் முடியும்.”
“ஆகவே கட்சி உயிர் வாழ்வதற்கு அம்னோ உறுப்பினர்கள் புதிய ஊடகங்கள் தரும் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்,” என நஜிப் வலியுறுத்தினார்.
பாரம்பரிய போர்க்களங்களில் இப்போது சண்டை நிகழ்வதில்லை என அவர் மேலும் கூறினார்.
“மூன்றாவதாக வாக்காளர்களில் அனைத்துப் பிரிவினரிடமும் சிந்தனை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அம்னோக்காரர்கள் உணர வேண்டும். அப்போதுதான் நாம் அவர்களுடைய ஆதரவைப் பெற முடியும்.”
அம்னோ கர்வம் பிடித்தது, முரட்டுத்தனமானது என்ற தோற்றம் ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்யா விட்டால் வாக்காளர்களும் மக்களும் நம்மிடமிருந்து ஒதுங்கி விடுவார்கள்.”
செய்திகளையும் உண்மைகளையும் திரித்துக் கூறுவது, இன்றைய கால கட்டத்தில் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒரு வழி அல்ல என தாம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக அரபு எழுச்சியை நஜிப் இதற்கு முன்னர் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
லிபியத் தலைவர் முவாமார் கடாபியின் வீழ்ச்சிக்கும் எகிப்து, துனிசியா, ஏமன், சிரியா ஆகியவற்றில் நிகழும் மாற்றங்களுக்கு துடிப்பான சமூக ஊடகங்களே காரணம் என்று அவர் சொன்னார்.
“அத்தகைய நவீன தகவல் தொழில்நுட்பங்கள் காரணமாக நாம், தூக்கிலிடப்படும் போது சடாம் ஹுசேனுடைய கடைசி நேரத்தையும் முவாமார் கடாபியின் தலைவிதியையும் துனிசியா, எகிப்து, லிபியா, ஏமன் ஆகியவற்றில் நிகழ்ந்த மாற்றங்களையும் சிரியாவில் நிகழும் ஆட்சேபங்களையும் நாம் பார்க்க முடிந்துள்ளது. அதற்கு எல்லாம் சமூக ஊடகங்களின் அறிமுகமே வழி வகுத்துள்ளது.”
“அந்த நாடுகளின் தலைவர்கள் செய்திகளைத் திரித்துக் கூற முயன்ற போதிலும் கைத் தொலைபேசிகள், அகண்ட அலைவரிசைகள், யூ டியூப் ஆகியவை அந்த நாடுகளில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை காட்டி விட்டன.”