பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் ஐஆர்டி-யில் புகார்

சிலாங்கூரில், தங்களது முதலாளிகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள், சிலாங்கூர் தொழில்துறை தொடர்பு இலாகாவில் (ஐஆர்டி), தொழில்துறை தொடர்பு சட்டம் 20-ம் பிரிவின் கீழ், மனு தாக்கல் செய்தனர்.

நேற்று, 8 பள்ளிகளில், பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களால் பணிக்கமர்த்தப்பட்ட அந்த 35 தொழிலாளர்களும், கடந்த மே 31-ம் தேதி முதல் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

ரவாங், தாசேக் புத்ரி 2 தேசியப் பள்ளியில் பணியாற்றிய, 4 பிள்ளைகளுக்குத் தந்தையான எம் கணேசன் பிள்ளையும் அவரது மனைவி இராஜேஸ்வரியும் அவர்களில் அடங்குவர். ஒப்பந்தம் நிறைவு பெற்றுவிட்டதால், ஜூன் 1 முதல் வேலைக்கு வரவேண்டாம் என, மே 30-ம் தேதி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

பணி நிறுத்தத்தை, தனது முதலாளி அறிவிக்காமல், பள்ளியின் தலைமையாசிரியர் தன்னிடம் தெரிவித்தது, தனக்கு அதிக அதிர்ச்சி அளித்ததாக கணேசன் கூறினார்.

“அவர் (தலைமையாசிரியர்) ஆட்குறைப்பு செய்யப்போவதாக மட்டுமே சொன்னார். ஆனால், அதற்கு காரணம் தெரியாது எனச் சொன்னார்.

“புதிய ஒப்பந்தக்காரருக்கு வேலையாட்கள் உள்ளதாக தலைமையாசிரியர் சொன்னார். 4 பேர் மட்டுமே தேவையாம், 3 பெண்கள், ஓர் ஆண், தோட்ட வேலைக்கு.

“ஆனால், நாங்கள் மொத்தம் 12 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டோம்,” என ஐஆர்டி-யில் புகார் அளிக்க வந்த அவர், மலேசியாகினியிடம் சொன்னார்.

இந்தத் திடீர் வேலை நீக்கத்தால், தன் குடும்பத்தைக் காப்பாற்ற கணேசனுக்கு வருமானம் இல்லாமல் போனது. அவரின் 3 பிள்ளைகள் இன்னும் பள்ளியில் படித்து கொண்டிருக்கிறார்கள், இப்போதுதான் ஒருவர் தனது டிப்ளோமா படிப்பை முடித்துள்ளார்.

“எந்த ஒரு நியாயமான காரணமும் இன்றி எங்களைப் பணி நீக்கம் செய்துள்ளனர். இது சட்டவிரோதமனது, எங்களுக்கு மீண்டும் வேலை வேண்டும்,” என்றார் கணேசன்.

ஹரி ராயாவுக்கு முன் பணி நீக்கம்

சித்தி என்று மட்டும் தன்னை அறிமுகம் செய்துகொண்ட பெண்மணி, 44, நோன்புப் பெருநாளுக்கு ஒரு வாரம் இருக்கையில், பணி நீக்கம் செய்யப்பட்டது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்ததாகக் கூறினார்.

கோலா லங்காட், கெபூன் பாஹாரு தேசியப் பள்ளியில், கடந்த 5 ஆண்டுகளாக அவர் துப்புரவாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

அப்பள்ளியில் வேலையில் இருந்த 13 பேரில், 9 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக சித்தி சொன்னார்.

கணேசன் மற்றும் இராஜேஸ்வரியைப் போல், பள்ளியின் தலைமையாசிரியரே சித்தியிடம் பணி ஒப்பந்தம் நிறைவு பெற்றதைத் தெரிவித்துள்ளார்.

“எந்த ஒரு அறிவிப்பும் (நோட்டிஸ்) இல்லாமல், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டேன்.

“இது மாநிலக் கல்வி இலாகாவின் அறிவுறுத்தல், இது (அறிவுறுத்தல்) கல்வி அமைச்சிலிருந்தும் வந்திருக்கலாம் எனத் தலைமையாசிரியர் சொன்னார்,” என சித்தி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இந்த 2 பள்ளிகள் தவிர்த்து, செக்‌ஷன் 4 கோத்தா டாமான்சாரா இடைநிலைப்பள்ளி, எங்கு உசேன் இடைநிலைப்பள்ளி (செமினி), தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி (பந்திங்), செராஸ் பத்து 11 சீனப்பள்ளி, செராஸ் பத்து 9 சீனப்பள்ளி, சுங் ஹுவா சீனப்பள்ளி (பந்திங்) ஆகிய 6 பள்ளிகளிலும் இத்தகையப் பணி நீக்கம் நடந்துள்ளது.

தொழிலாளர்கள் கொண்டுவந்த 30 புகார்களையும் பதிவு செய்துள்ளதாகக் கூறிய சிலாங்கூர் ஐஆர்டி இயக்குநர் அனித்தா அஹ்மாட், தொழிலாளர்கள் மற்றும் குத்தகையாளர்கள் இடையே மிக விரைவில், ஜூலை மாதத் தொடக்கத்தில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு உதவ பி.எஸ்.எம். தயார்

இந்தத் தொழிலாளர்களுக்குத் துணையாக, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர், எம் சிவரஞ்சனி, நேற்று ஐஆர்டி வந்திருந்தார்.

நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், திடீர் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், ஐஆர்டியில் முறையாகப் புகாரளிக்க பி.எஸ்.எம். அவர்களுக்கு உதவும் என அவர் சொன்னார்.

“வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 60 நாள்களுக்குள்ளாக ஐஆர்டியில் புகார் அளிக்க வேண்டும்.

“இனி, தொழிலாளர்கள் நேரடியாக இங்கு (ஐஆர்டி) வரத் தேவையில்லை, அவர்களைப் பிரதிநிதித்து, நாங்கள் புகார் படிவங்களைத் திரட்டி, இங்கு வந்து சமர்ப்பிக்க உள்ளோம். வேலை இழந்த தொழிலாளர்கள், அந்தந்த மாநிலத்தில், பி.எஸ்.எம். பிரதிநிதிகளைத் தொடர்புகொள்ளலாம்,”  என அவர் சொன்னார்.

இந்தத் தொழிலாளர்களுக்குக், குறிப்பாக, தூரத்தில் வசிப்பவர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகக் கூறிய சிவரஞ்சனி, அவர்களின் நலனைப் பாதுகாக்க, ‘தேசிய அரசாங்கத் துப்புரவுத் தொழிலாளர்கள் பிணையம்’ (ஜே.பி.கே.கே.)  என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

“சிலாங்கூரில் தொடங்கி, நாங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லவிருக்கிறோம்,” என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தொடர்புகொள்ள வேண்டிய மாநிலப் பிரதிநிதிகளின் எண்கள்