பொருளாதார விவகார அமைச்சர், அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோவுடன் தன்னைத் தொடர்புபடுத்துவதை, தான் விரும்பவில்லை என்று ரஃபிசி ரம்லி வலியுறுத்தினார்.
“அந்த விஷயத்தில் சம்பந்தப்பட நான் விரும்பவில்லை, அது கட்சி அளவில் ஆனாலும் சரி……….. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை விசாரிக்கட்டும்,” என மலேசியாகினியிடம் அவர் இன்று தெரிவித்தார்.
கடந்தாண்டு கட்சி தேர்தலின் போது, ஹசிக் அப்துல்லா அப்துல் அஸிஸ், ரஃபிசி தரப்பில் இருந்ததாகக் கூறியுள்ள, சபா பிகேஆர் இளைஞர் பகுதியின் துணைத் தலைவர், பிளிஸ்சன் ஜைனுடினின் குற்றச்சாட்டுக்கு, ரஃபிசி இவ்வாறு பதிலளித்தார்.
ஹசிக் கட்சிக்கு புதியவர் என்றாலும், அவருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக பிளிஸ்சன் மேலும் கூறியுள்ளார்.
ஹசிக்கின் போட்டியிடும் தகுதி குறித்து தான் கேள்வி எழுப்பியுள்ளதாக ரஃபிசி தெரிவித்தார்.
“ஹசிக் கட்சியிலிருந்து விலகிவிட்டார் என்று நான் கூறியிருந்தேன்,” என அவர் சொன்னார்.
“இருப்பினும், ஆய்வு செய்து பார்த்ததில், அவர் கட்சியிலிருந்து வெளியேற விண்ணப்பிக்கவில்லை, எனவே அவர் இன்னும் கட்சி உறுப்பினர்தான்,” என்றார் ரஃபிசி.
2016-ல், ஹசிக் கட்சியிலிருந்து விலக எண்ணியிருந்ததாக, மலேசியாகினியிடம் சில ஆதரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், கட்சியின் தலைமைச்செயலாளர், சைஃபுட்டின் நசுத்தியோன், பதவி விலகல் கடிதம் எதனையும் தான் பெறவில்லை என்று கூறினார்.
சில பிகேஆர் தலைவர்கள், ஹசிக் இன்னும் கட்சியில் உறுப்பினர் என்பதால், அவரைப் பாதுகாக்க நினைக்கின்றனர் எனும் பிளிஸ்சனின் குற்றச்சாட்டிற்கும், ரஃபிசி கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சி கூட்டத்தைத் தவிர்க்க எண்ணியதாக ரஃபிசி மேலும் கூறினார்.
“அந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொன்டிருந்தால், அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு நான்தான் காரணம் என்று நினைப்பார்கள், அதனால்தான் கூட்டத்திற்கு நான் செல்லவில்லை,” என்று அவர் சொன்னார்.