“நான் மிகவும் கவலையாக இருக்கிறேன், கணவரும் 3 பிள்ளைகளும் இறந்துவிட்டனர்,” என குவா மூசாங், கம்போங் குவாலா கோவைவில், பாத்தேக் இனத்தைச் சேர்ந்த சோம் ங்காய், 50, எனும் பெண்மணி வருத்தத்துடன் கூறினார்.
தன் கணவர், ஹம்டான் கிளாடியும், தனது 3 பிள்ளைகளும் – லைலா, ரோமி மற்றும் டின் – இதுவரை காரணமே அறியப்படாத மர்மான நோய்க்கு, இந்த 2 வாரக் காலகட்டத்தில் பலியானதாக சோம் சொன்னார்.
இறப்பதற்கு முன்னதாக, அவர்களிடம் தலை வலி, வாந்தி, காய்ச்சல் மற்றும் சாப்பிட ஒவ்வாமை போன்ற அறிகுறிகள் இருந்ததாக, இன்று, குவா மூசாங், ஃபெல்டா ஆரிங் 10-ல், துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலிடம் உதவி பெறவந்த அவர் கூறினார்.
இதுவரை 14 உயிர்கள் பலியான அக்கிராமத்தை, அரசாங்கம் சிவப்பு மண்டலமாக நேற்று அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, சில அரசாங்க நிறுவனங்களைத் தவிர மற்றவர்கள் அதனுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில், இதுவரை 2 சடலங்கள் மீது மட்டுமே சவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மற்ற 12 சடலங்களும் பாரம்பரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. அச்சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை, அவற்றுள் 8 சடலங்களைக் கண்டுபித்துள்ளது.
தனது கணவர் மே 5-ம் நாள் இறந்ததாகக் கூறிய சோம், அடுத்து மே 8-ம் நாள் லைலா மற்றும் ரோமி இருவரையும், மூன்றாவது பிள்ளை டின் -ஐ மே 22-ல் இழந்ததாகவும் சொன்னார்.
இவ்வளவு குறுகிய காலத்தில், குடும்ப உறுப்பினர்களை இழப்பேன் என்று நினைத்துகூடப் பார்க்கவில்லை என, 7 பிள்ளைகளுக்குத் தாயான அவர் கவலையுடன் கூறினார். இறப்பதற்கு முன்னர், அவர்கள் நால்வரும் நோயால் அவதிபட்டதாகவும், அது மிகக் கொடுமையாக இருந்தது என்றும் சொன்னார்.
தனது இன்னொரு பிள்ளை, குவா மூசாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.