சிஐடி தலைவர்: ஹசிக் விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்

பிகேஆர் சாந்துபோங் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ்மீது விசாரணை நடக்கிறது, விசாரணை முடிந்ததும் பிணையில் விடுவிக்கப்படுவார் எனக் கூட்டரசு குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஹுசிர் முகம்மட் கூறினார்.

“விசாரணை இன்றே முடிந்து விடலாம். முடிந்ததும் விடுவிக்கப்படுவார்”, என்றவர் மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டபோது தெரிவித்தார்.

நேற்று மாலை மணி 6க்கு, ஹசிக் கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் அவர் மணிலாவுக்குப் புறப்பட்டுச் செல்ல விருந்த நேரத்தில் கைதானார்.

அவர்மீது குதப்புணர்ச்சி காணொளி தொடர்பாக விசாரணை நடப்பதாக ஹுசிர் நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

கடந்த புதன்கிழமை ஹசிக், சமூக ஊடகங்களில் வலம்வரும் பாலியல் காணொளியில் காணப்படும் இரண்டு ஆடவர்களில் ஒருவர் தான் என்பதை முகநூலில் ஒப்புக்கொண்டிருந்தார்.

அதில் உள்ள இன்னொரு ஆடவர் பொருளாதார விவகார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி என்றவர் குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.

அஸ்மின் அதை வன்மையாக மறுத்தார். சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறினார்.