ஜெயக்குமார் : இங்கிலாந்து முறையில், தனியார் கிளினிக் மருத்துவக் கட்டணங்களைக் கையாளவும்

இங்கிலாந்தில், நடைமுறைபடுத்தப்படும் தேசியச் சுகாதாரச் சேவை (என்எச்எஸ்) போன்ற சுகாதார முறைகள், தனியார் பொது மருத்துவ ஆலோசனைக்கான குறைந்த கட்டணப் பிரச்சனையைத் தீர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகின்றன.

இந்த முறையின் அடிப்படையில், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசாங்கம் ஒரு மருத்துவருக்கு ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தும் என்று பிஎஸ்எம் மத்திய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ் மலேசியாகினியிடம் கூறினார்.

“முடிந்தவரை, தனியார் ஜி.பி.-க்கள் தேசியச் சுகாதாரத் திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும்.

“இந்தத் திட்டம் இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ளது, அங்கு அவர்கள் பல நோயாளிகளை ஒரு மருத்துவரின் கீழ் வைக்கின்றனர், மேலும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னர், தனியார் ஜிபி-க்களுக்கான ஆலோசனை கட்டணம் RM10 முதல் RM35 இடையே நிர்ணயிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டில், வசதிகள் மற்றும் தனியார் பராமரிப்பு சேவைகள் சட்டத்தின் 13-வது அட்டவணையின் கீழ் அரசிதழ் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் ஜிபி ஆலோசனைக் கட்டணத்தை RM35-லிருந்து RM125-க்கு உயர்த்த திருத்தம் செய்யப்பட்டது.

இருப்பினும், அத்தகையத் திருத்தங்கள் அதே சட்டத்தின் 7-வது அட்டவணையின் கீழ், தங்கள் சொந்த கிளினிக்குகளைக் கொண்ட மருத்துவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவருக்கு இணையாக, ஆலோசனைக் கட்டணத்தை உயர்த்துமாறு அவர்கள் கேட்டார்கள்.

இருப்பினும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, குறிப்பாக நிதி ரீதியாக சில தடைகள் உள்ளன.

அதிக செலவாகும்

நோயாளிகளின் ஆலோசனைக் கட்டணத்தை, அரசாங்கம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்தத் திட்டத்திற்குக் கணிசமான செலவு ஏற்படும் என்று ஜெயக்குமார் கூறினார்.

“இது ஒரு நல்ல யோசனை, ஆனால் அதற்கு நிறைய செலவாகும். கட்டணம் செலுத்துவதற்கான பணம் அரசாங்கத்திற்கு எங்கிருந்து வரும்?”

“இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, இப்பிரச்சனை முக்கியத் தடையாக உள்ளது,” என்று அவர் மலேசியாகினிக்குத் தெரிவித்தார்.

சில மருத்துவர்கள் குறைந்த ஆலோசனைக் கட்டணத்தின் காரணத்தால், கிளினிக் இயக்க செலவுகளை ஈடுகட்ட மருந்துகளின் விலையை உயர்த்தியுள்ளனர் என அவர் மேலும் சொன்னார்.

இக்கட்டான இப்பிரச்சனைக்குத் தீர்வு கேட்டபோது, B40 (பெக்கா) குழுவிற்கான ‘சுகாதார நலத் திட்டம்’, இந்தத் திட்டத்தை உணர்ந்து கொள்வதற்கான முதல் படியாகும் என்று ஜெயக்குமார் கூறினார்.

இருப்பினும், இதனை இன்னும் செம்மைபடுத்தி, விரிவான அமைப்பு ஒன்றை உருவாக்கி, இத்திட்டத்திற்கான நிதியை திரட்டத் தயாராக வேண்டும் என்று அவர் சொன்னார்.

‘B40 பெக்கா’ திட்டம் என்பது குறைந்த வருமானம் உடையவர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சுகாதார அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் ஓர் அரசாங்க முயற்சியாகும்.

இந்தத் திட்டம் தொற்றுநோயற்ற நோய்கள் (என்.சி.டி) சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகிறது.

இங்கிலாந்தில், என்.எச்.எஸ். என்பது உலகளாவிய மிகப்பெரிய சுகாதார அமைப்பாகும்.

இந்தச் சேவைக்கு அரசாங்கம் நிதியளிக்கிறது, சுகாதார மற்றும் சமூகச் சேவைகள் இலாகா மேற்பார்வையிடுகிறது.

முறையான அனைத்து இங்கிலாந்து குடிமகனுக்கும், என்.எச்.எஸ். சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது, அவற்றுள் பெரும்பாலான சேவைகள் இலவசமாக இருக்கும்.

அவசரச் சிகிச்சை மற்றும் தொற்று நோய்களுக்கான சிகிச்சை போன்ற சில சேவைகள், சுற்றுலாப் பயணிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.