அன்வார் : ஆபாச காணொளி விவகாரத்தில் எனக்கோ என் ஆதரவாளர்களுக்கோ சம்பந்தமில்லை

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், சமுக ஊடகங்களில் வலம்வரும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியைக் களங்கப்படுத்தும் ஆபாச காணொளிகள் விவகாரத்தில் தமக்கும் தம் ஆதரவாளர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார்.

எல்லாரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.

“நாங்கள் அதைச் செய்ய எந்தக் காரணமுமில்லை. நாங்கள் ஒரே கட்சியை, பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்தவர்கள்”, என்றவர் நேற்றிரவு அவரது போர்ட் டிக்சன் தொகுதியில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அன்வார் தமக்கும் அஸ்மினுக்குமிடையில் பதவிப் போராட்டம் நடப்பதாகக் கூறப்படுவதையும் மறுத்தார்.

“எல்லாத் தரப்பினரும் என்னை ஆதரிக்கிறார்கள்”, என்றாரவர்.

எப்போது பிரதமர் பதவியை மாற்றிக் கொடுக்கப்படும் என்பதை டாக்டர் மகாதிர் முகம்மட் தெரிவிக்க வேண்டும் என்று Otai Reformis அமைப்பு கூறியிருப்பதை அன்வார் ஏற்கவில்லை.

“அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இது பிரதமருக்கும் ஹரப்பானுக்குமிடையிலான ஒரு (உள்) விவகாரம். மற்றவர்கள் கருத்துச் சொல்லலாம். ஆனால், நான் ஏற்க மாட்டேன்”, என்றார்.

ஆபாச காணொளிமீதான புலன் விசாரணை முடியும்வரை அஸ்மின் விடுப்பில் செல்ல வேண்டும் என்று கூறப்படுவதையும் அன்வார் ஏற்கவில்லை.