ஜூலையில் செயல்படுத்தப்படவுள்ள குறிப்பிட்ட தரப்பினருக்கானது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் உதவித் தொகைத் திட்டம் குறித்து தங்களுக்கு இன்னும் சரியான முறையில் விளக்கமளிக்கப்படவில்லை என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அத்திட்டம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு எரிபொருள் உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அது எப்படிச் செயல்படப் போகிறது என்பது இதுவரை தங்களுக்குத் தெரியாது என்று மலேசியா பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் கைருல் அன்னுவார் அப்துல் அசிஸ் ஃப்ரி மலேசியா டுடே-இடம் இன்று கூறினார்.
“கண்ணைக் கட்டிவிட்டதுபோல் இருக்கிறது. அது எப்படிச் செயல்படப் போகிறது என்பது தெரியவில்லை. யாரும் அது பற்றி விளக்கவுமில்லை”, என்றவர் சொன்னார்.
“அத்திட்டப்படி வாகனமோட்டுநர்களில் ஒரு தரப்பினர் அதைப் பெறத் தகுதி பெறுவார்கள் இன்னொரு தரப்பினர் தகுதி பெற மாட்டார்கள்”, என்றாரவர்.
அத்திட்டத்தின் அமலாக்கத்தில் சிக்கல் ஏதும் ஏற்பட்டால் வாகனமோட்டிகள் தங்கள் கோபத்தை விற்பனையாளர்கள்மீதுதான் காண்பிப்பார்கள் என்றவர் கவலை கொள்கிறார்.
1,500-சிசிக்குக் குறைவான இயந்திர திறன் கொண்ட கார்களையும் 125க்குக் குறைவான சி சி மோட்டார் சைக்கிள்களையும் வைத்திருப்போருக்கு ஒரு லிட்டருக்கு 30 சென் உதவித் தொகை வழங்கப்படும் என
புத்ரா ஜெயா, கடந்த ஆண்டில் அறிவித்திருந்தது.
இப்போது ஓட்டுமொத்தமாக வழங்கப்படும் உதவித் தொகைபோல் அல்லாது ஓர் இலக்கைக் கொண்ட புதிய உதவித் தொகைத் திட்டம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.