உதவித் தலைவர்கள் மற்றவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கிக்கொள்ள தயார்

தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பில்லாதவர்கள் என்று கருதப்படும் அம்னோ தலைவர்கள் தாங்களாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

இதனைத் தெரிவித்த அம்னோ உதவித் தலைவர்கள் மூவரும், தங்கள் சேவை இனியும் தேவையில்லை என்று உறுப்பினர்களும் மக்களும் நினைத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தாங்கள் ஒதுங்கிக்கொள்ளத் தாயாராக இருப்பதாகவும் கூறினர். 

உதவித் தலைவர்களில் ஒருவரான அஹ்மட் ஜாஹிட் அமிடி, இரகசியமாக நடந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் வெற்றிபெறும் வாய்ப்பில்லாதவர்கள் தாங்களாகவே ஒதுங்கிகொள்வது நல்லது என்று கட்சித் தலைவர்  குறிப்புக்காட்டினார் என்பதை ஒப்புக்கொண்டார்.

“தலைவர் அவ்வாறு கூறியதும் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது.(முன்னாள் திரெங்கானு மந்திரி புசார்) இட்ரிஸ் ஜூசோ 13வது பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

“இந்த உணர்வுதான் தேவை. தன்னைவிட கட்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.

உதவித் தலைவர்கள் மூவரும் “வெற்றி வாய்ப்பு அற்ற வேட்பாளர்கள்” எனக் கருதப்பட்டால் இடம்விட்டு ஒதுங்குவார்களா என்று வினவிதற்கு மூவரும் ஆம் என்றார்கள்.

இன்னொரு உதவித் தலைவரான ஹிஷாமுடின் உசேன், கட்சி உறுப்பினர்கள் முன்னாள் தலைவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றார்.

“துன் உசேன் ஒன், துன் டாக்டர் மகாதிர், பாக் லா போன்றோரே விருப்பத்துடன் ஒதுங்கிக் கொண்டார்கள் என்கிறபோது நாம் யார் மறுப்பதற்கு?

“அவர்கள் முன்மாதிரியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதை நாம் பின்பற்ற வேண்டும்”, என்று ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

மற்றொரு உதவித் தலைவரான ஷாபி அப்டால் (வலம்), தங்களால் மேற்கொண்டு பங்களிப்புச் செய்ய இயலாது என்ற நிலை வரும்போது, தன்னலத்துக்கு மேலாக கட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார்.

“ கட்சி, பாரிசான் நேசனலுடன் ஆட்சி பீடத்தில் இருந்துகொண்டு நாட்டை வழிநடத்துவதே முக்கியம்.

“அம்னோ உறுப்பினர்கள் வேட்பாளர்களாக தேர்வு பெறாதபோது அல்லது வெற்றிபெறும் வாய்ப்பில்லாதவர்களாகக் கருதப்படும்போது அவர்கள் இதை உணர வேண்டும் என்று கட்சித் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். நிலைமை முன்னர் இருந்ததுபோல் இல்லை. இப்போது இளமைக்குத்தான் தேவையுள்ளது. அதே வேளை புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவதும் முக்கியமாக உள்ளது.”

அம்னோவின் மேன்மைக்காக அனைவரும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

கட்சித் தலைவரின் ஆலோசனை சரியான தருணத்தில் வந்துள்ளதாக அஹ்மட் ஜாஹிட் கூறினார்.

“நம்மை நாமே விமர்சித்துக்கொள்வதும் மதிப்பிட்டுக்கொள்வதும் முக்கியம். கட்சிக்கு வெற்றியைக் கொண்டுவர முடியாது என்று நினைத்தால் பின்வாங்குவது நல்லது”, என்றவர் சொன்னார்.

TAGS: