பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது ஜயிஸ் என்ற சிலாங்கூர் மாநில இஸ்லமிய விவகாரத் துறை நடத்திய சர்ச்சைக்குரிய சோதனை குறித்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாநில அரசாங்கம் ஆலோசனை மன்றம் ( syura ) ஒன்றை அமைத்துள்ளது.
மாநில முப்தி தாமியெஸ் அப்துல் வாஹிட், துணை முப்தி அப்துல் ஒமார், மந்திரி புசார் காலித் இப்ராஹிம் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். அந்த விவரத்தை காலித் இன்று அறிவித்தார்.
“கடந்த வாரம் அந்த விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் சுல்தானுடன் சந்திப்பு நடத்திய போது அத்தகைய ஆலோசனை மன்றத்தை அமைப்பதற்கான யோசனையை சுல்தான் தெரிவித்தார்”, என்றும் அவர் சொன்னார்.
“அந்தப் பிரச்னையைத் திருப்தி அளிக்கும் வகையில் தீர்ப்பதற்கு ஆலோசனை வழங்கிய சுல்தானுக்கு நான் நன்றி கூறுகிறேன்”, என காலித் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அந்த விவகாரம் மீது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் காலித் விடுக்கும் முதல் அறிக்கை இதுவாகும்.
அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் ஜயிஸின் முழு அறிக்கைக்காகக் காத்திருக்க மாநில அரசாங்கம் விரும்புவதாக அவர் கடைசியாக கூறியிருந்தார்.
டமன்சாரா உத்தாமா தேவாலய வளாகத்தில் நடைபெற்ற பல இன நன்றி தெரிவிக்கும் விருந்தில் ஜயிஸ் ” கண்காணிப்பு” நடத்தியதாக தகவல் வெளியானதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 5ம் தேதி அது குறித்து அறிக்கை விடுவதற்கு மாநில ஆட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் விதிக்கப்பட்ட தடை இன்னும் அமலில் இருப்பதாகவும் காலித் சொன்னார்.