அன்வாரின் உதவியாளர் காணாமல் போகவில்லை, விடுப்பில் உள்ளார்- பேராக் பிகேஆர் துணைத் தலைவர் விளக்கம்

பேராக் பிகேஆர் தலைவர் ஃபார்ஹாஷ் வாவா செல்வடோர் விடுப்பில் சென்றிருப்பதாகவும் அவர் எப்போதும் கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் துணைத் தலைவர் எம் ஏ. தினகரன் கூறினார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளருமான ஃபார்ஹாஷுடன் தான் எப்போதும் தொடர்பில் இருப்பதாகவும் தினகரன் கூறினார்.

“அவர் மாநில தலைமைத்துவத்தின் புலனக் குழுவில் தீவிரப் பங்காற்றி வந்திருப்பவர். ஃபார்ஹாஷ் இப்போது விடுப்பில் உள்ளதாக அறிகிறேன். ஆனால். நம் நாட்டு அரசியலைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்.

“இந்த (ஆபாச காணொளி) விவகாரத்தில் உண்மைகளுக்கும் விசாரணை முடிவுகளுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, விடுப்பில் சென்றுள்ள ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது”, என்று தினகரன் ஓர் அறிக்கையில் கூறினார்.

பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாச காணொளிகள் சமுக வலைத்தளங்களில் பரவலானதை அடுத்து மாநில பிகேஆர் தலைவர் ஒருவரைக் காணவில்லை என்றும் பிகேஆர் புலனக் குழுவில் அவரைக் காணவில்லை என்ற செய்தி பரப்பரப்பாக விவாதிக்கப்படுவதாகவும் த ஸ்டாரில் வெளிவந்த செய்தியை அடுத்து தினகரன் மேற்சொன்ன அறிக்கையை வெளியிட்டிருந்தார்.