அல்டான்துயாபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாராம் ஹசிக்

2006-இல் மங்கோலிய பெண்ணான அல்டான்துயா ஷரீபு ஷா ஆலம் காட்டுக்குள் வைத்து இரண்டு முறை சுடப்பட்டார். அத்துடன் நின்றுவிடவில்லை. அவரது உடலுக்கு வெடிவைத்து சுக்கு நூறாக தகர்க்கப்பட்டது.

அக்கொலை தொடர்பில் போலீஸ் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இருவர்மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், கொலைக்கான நோக்கம் இன்றுவரை தெரியவில்லை.

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம்தான் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாசக் காணொளியில் இருக்கும் ஆடவன் தான்தான் என்று ஹசிக் அப்துல்லா அப்துல் அசீஸ் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கக் காரணமாகும்.

“துணிந்துதான் செய்தேன். அல்டான்துயா ஷரீபுக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கு ஏற்படுவதைவிட நடந்ததை வெட்ட வெளிச்சமாக்குவதே மேல் என்று நினைத்தேன்”.

அமைச்சருக்கும் தனக்குமிடையிலான இந்த இரகசிய புணர்ச்சி விவகாரம் தனக்குத் தெரியாமலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறிக்கொண்ட ஹசிக், பதிவான காணொளிகள் அம்பலமானதும் தன் உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்று அஞ்சியதாகவும் கூறினார்.

தன் வாயை அடைப்பதற்கு அவர்கள் ‘எதையும் செய்யலாம்’ என்றவர் அஞ்சினார்.

அதனால்தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அதை ஒரு காணொளியாகவும் வெளியிட்டாராம் ஹசிக்.

ஆனால், ஹசிக் கூறுவதை மறுக்கிறார் அஸ்மின். அது தன் அரசியல் வாழ்க்கையைக் கெடுப்பதற்கு நடக்கும் சதி என்கிறார் அவர்.