நூலாசிரியர்: அன்வாரிடம் நூலின் பதிப்புரிமையை விற்க முயன்றேன், மிரட்டிப் பணம் பறிக்க முயலவில்லை

அன்வார் இப்ராகிம் ஏன் பிரதமராகும் தகுதியற்றவர் என்ற நூலை எழுதிய ஆசிரியர், அந்த நூலை வைத்து பிகேஆர் தலைவரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்.

அந்த நூலின் ஆசிரியரான யகாயா இஸ்மாயில். அந்நூலின் பதிப்புரையை வாங்குவதற்கு அன்வாருக்கும் சுங்கை பட்டானி எம்பி ஜொஹாரி அப்துலுக்கும் ஒரு வாய்ப்பளித்ததாகக் கூறினார்.

அந்த நூலின் பதிப்புரிமையைப் பெற சில தரப்புகள் ஆர்வம் கொண்டிருப்பதால் அவர்கள் கொடுக்க முன்வந்த தொகையைவிட கூடுதல் தொகையைப் பெறப் பேரம் பேசியதைத்தான் மிரட்டல் என்கிறார்கள் என்றாரவர்.

“அன்வாருக்கும் ஜொகாரிக்கும் வாசிப்பதற்கு ஒரு பிரதி கொடுத்தேன், அவர்கள் விரும்பினால் நூலின் பதிப்புரிமையை வாங்கிக் கொள்ளலாம். இது நூல் விற்பனைத் துறையில் வழக்கமாக நடப்பதுதான்

“நூலின் பதிப்புரிமையை விற்கும் நோக்கத்தில் வேறு சிலரிடமும் நூல் பிரதிகளைக் கொடுத்தேன். அந்த நூல் நல்ல விற்பனை காணும் என்பதால் பதிப்புரிமை விலையை ரிம400,000 என்று நிர்ணயித்தேன்.

“அன்வார் நான் அவரிடம் ரிம400,000 கேட்டு மிரட்டுகிறேன் என்று கூறியபோது நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.நான் சொன்னது பதிப்புரிமைக்கான விலையைத்தான். அவருக்கு (அன்வாருக்கு) விருப்பமில்லை என்றால் வாங்க வேண்டியதில்லை. வாங்கத்தான் வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

“நான் அந்த நூலை வெளியிட்டு, அது அன்வார்மீது அவதூறு கூறுவதாக அவர்கள் நினைத்தால் வழக்கு தொடுக்கலாம். அப்புறம் என்ன பிரச்னை?”, என்று யகாயா இன்று காலை அவரது முகநூல் பக்கத்தில் கூறினார்.

நூலின் பதிப்புரிமையை வாங்குவதற்கு ஆள் இல்லை என்றால் தானே நூலை வெளியிடப்போவதாக அவர் கூறினார்.

கெடா பிகேஆர் தலைவர் மன்றத் தலைவரான ஜொகாரி, நூலாசிரியர் யகாயா தன்னைத் தொடர்புகொண்டு ஒரு தரப்பு நூலுக்கு ரிம400,000 கொடுக்க முன்வந்துள்ளது என்றும் அன்வாரிடம் சொல்லி அதைவிடக் கூடுதல் தொகையைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டார் என்றார்.

“இந்த மலிவான எழுத்தாளர் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் நேரம் வந்து விட்டது. இவர் எங்களை மிரட்டி ரிம400,000 பெற முயன்றார். போலீஸ் இதை விசாரிக்கட்டும்”, என ஜொகாரி கூறினார்.

இதனிடையே, அன்வாரும் இதை உறுதிப்படுத்தினார். எழுத்தாளருக்கு எதிராக போலீசில் புகார் செய்யுமாறு ஜொகாரியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

யாரோ யகாயாவுக்குப் பணம் கொடுத்து இப்படி ஒரு நூலை எழுத வைத்துள்ளனர் என்றார் அந்த போர்ட் டிக்சன் எம்பி.

யகாயா இதை மறுத்தார். யாரும் பணம் கொடுக்கவில்லை. ‘அன்வார் ஏன் பிரதமர் ஆக முடியாது’ என்ற நூல் சொந்த முயற்சியில் எழுதப்பட்டது என்றாரவர்.

அரசியல் பற்றி 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருவதாகக் கூறிய அவர், 1993-இல் அன்வார்மீது ஒரு நூலை வெளியிட்டிருப்பதாகவும் சொன்னார்.

நூல் பதிப்புரிமையை வாங்கும் நோக்கத்தில் “ஒரு குழு” ஜூன் 16-இல் தன்னைச் சந்திக்கவிருப்பதாகவும் யகாயா தெரிவித்தார்.