சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க், தான் இந்தியா சென்று வழக்குகளை எதிர்நோக்க ஆயத்தமாக இருப்பதாகவும் அதற்கு இந்திய உச்ச நீதிமன்றத்திடமிருந்து கைது செய்வதில்லை, சிறையில் தள்ளுவதில்லை என்ற உத்தரவாதம் தேவை என்றும் கூறுகிறார்.
“குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை நான் கைது செய்யப்பட மாட்டேன், சிறையில் அடைக்கப்பட மாட்டேன் என்று இந்திய உச்ச நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக உறுதி கூறுமானால் நான் நீதிமன்றங்களில் முன்னிலை ஆகத் தயார்”, என ஜாகிர் சன் நாளேட்டிடம் கூறினார்.
இந்தியாவில் பிறந்தவரும் மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி பெற்றவருமான அச் சமய போதகர், பணமோசடி வழக்குக்காக ஜூலை 31-இல் மும்பாய் நீதிமன்றத்தில் முன்னிலை ஆக வேண்டும் என்ற நீதிமன்ற ஆணை குறித்துக் கருத்துரைத்தபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் முன்னிலை ஆகத் தவறினால் பிணையில் விடா கைதாணை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஆனால், ஜாகிர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றுரைத்து கைது ஆணை அவசியமில்லாத ஒன்று என்றார்.
“இதற்கு அவசியமே இல்லை. நான் தவறு செய்ததற்குச் சாட்சியுமில்லை ஆதாரமுமில்லை. என் பெயர் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்தால் நாட்டை எதிர்நோக்கும் முக்கிய பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பலாம் என்பதற்காகத்தான் இவ்வளவும் செய்யப்படுகிறது”, என்றார்.