ஹாடி: அம்னோவைக் கிள்ளினால் பாஸுக்கு வலிக்கும் அம்னோவுக்கும் அப்படித்தான்

அம்னோ , பாஸின் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதாகக் குறிப்பிட்ட பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஒன்றைக் “கிள்ளினால்” மற்றொன்றுக்கு வலிக்கும் என்றார்.

“அம்னோ வலது தொடை என்றால் பாஸ் இடது தொடை. வலது தொடை கிள்ளப்பட்டால் இடது தொடைக்கு வலிக்கும் இடது தொடையைக் கிள்ளினால் வலது தொடைக்கு வலிக்கும்”. நேற்றிரவு குவாந்தான் விஸ்மா பிலியா இந்திரா மக்கோடாவில் நிகழ்ந்த விருந்துபசரிப்பில் ஹாடி அவ்வாறு கூறினர். விருந்தில் பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலும் கலந்துகொண்டார்.

பாஸ் பேராளர் மாநாட்டை(முக்தாமார்) ஒட்டி அவ்விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ந்தது.

பாஸும் அம்னோவும் ஒன்றை மற்றொன்று விருந்துக்கு அழைப்பதும் உபசரிப்பதும் காலனிய காலத்திலிருந்து நடந்து வருகிறது என்பதை ஹாடி சுட்டினார்.

பாஸுக்கு முன்பிருந்த ஹிஸ்புல் முஸ்லிமின், சரிகாட் இஸ்லாம் ஆகிய கட்சிகள் பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டபோது அவற்றின் தலைவர்களில் பலர் அம்னோவில் சேர்ந்தனர் என்றாரவர்.

அவ்விரண்டு கட்சிகளும் பிறகு அம்னோவிலிருந்து விலகி 1951-இல் பாஸை அமைத்தாலும் இனமும் இஸ்லாமும் “சவாலை எதிர்நோக்கியபோதெல்லாம்” அவை கைகோத்து செயல்பட தவறியதில்லை என்றார்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக 1969 கலவரங்களுக்குப் பின்னர் பாஸ் பிஎன்னில் இணைந்ததை அவர் சுட்டிக்காட்டினார். பிறகு 1978-இல் அது பிஎன்னிலிருந்து விலகியது.

“இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது (டாக்டர்) மகாதிர் (முகம்மட் துங்கு அப்துல் ரஹ்மானால் விலக்கப்பட்டதும் அவருக்குப் பேசுவதற்கு ஒரு இடமில்லாமல் போய்விட்டது. பாஸ்தான் அவர் பேசுவதற்கு மேடை அமைத்துக் கொடுத்தது.

“அம்னோ உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் பாஸுக்குச் செல்வதும் பாஸ் கட்சியினர் விலக்கப்பட்டால் அவர்கள் அம்னோவுக்குச் செல்வதும் வழக்கமாக இருந்தது”,என்றாரவர்.

நாடு இப்போது ஒரு சவாலை எதிர்நோக்குவதாகக் கூறிக்கொண்ட ஹாடி, இப்போதைய நிலைமை “முஸ்லிம்களுக்குச் சாதகமாக இல்லை”, என்றார்.

“பொதுத் தேர்தல் அண்மையில்தான் முடிந்து அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் இப்போது முஸ்லிம்- அல்லாதார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆக, ஒரு மாற்றம் அவசியமாகியுள்ளது.

“நாம் ஒன்றுபட வேண்டும். கடந்த காலத்தில் சிறுசிறு விவகாரங்களுக்கெல்லாம் ஒன்றுசேர்ந்த நாம் இப்போது ஒரு மிகப் பெரிய சவாலை ஒன்றுசேர்ந்துதான் எதிர்க்க வேண்டும்”, என்றவர் சொன்னார்.