எம்ஏஎஸ்-ஸை மீட்டெடுப்பதில் அரசாங்கம் கவனத்துடன் நடந்து கொள்ளும்

அரசாங்கம் மலேசிய விமான நிறுவனத்தை (எம்ஏஎஸ்) விற்பதற்குத் தயார், ஆனால் தேசிய விமான நிறுவனம் என்ற அதன் அடையாளர் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

அரசாங்கம் எம்ஏஎஸ்-ஸில் நிறைய மாற்றங்களை செய்து வந்துள்ளது. ஆனால், என்ன மாற்றம் செய்யப்பட்டாலும் அது தொடர்ந்து நட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

“அதனால், அந்த விமான நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிக்கும் விசயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது”, என்றாரவர்.

“நிர்வாகத்தை மாற்றினால் மட்டும் போதாது, விமான நிறுவனத்தில் பல கோளாறுகள், எல்லாவற்றையும் சரிசெய்தாக வேண்டும்”, என்றாரவர்.

எம்ஏஎஸ் முன்னாள் பணியாளர்கள் இருவர், அவர்களில் ஒருவர் முன்னாள் சிஇஓ, சிறந்த விமான நிறுவனங்கள் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் வரத் தவறிய தேசிய விமான நிறுவனத்தின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று கூறியிருப்பது குறித்து மகாதிர் கருத்துரைத்தார்.

ஸ்கைட்ரெக்ஸ் அமைப்பு உலக விமான நிறுவனங்களை ஆய்வு செய்து 100 தலைசிறந்த விமான நிறுவனங்கள் என்றொரு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அப்பட்டியலில் எம்ஏஎஸ் இரண்டு இடங்கள் இறக்கம் கண்டு 36வது இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட அவ்விருவரும் விமான நிறுவனம் அதன் தரத்தை இழந்து விட்டது என்றனர்.

தொடர்சியாக ஐந்தாவது ஆண்டாக முதல் 20 இடங்களுக்குள் வரத் தவறிய எம்ஏஎஸ்ஸின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று விமானப் பனியாளர்களின் தேசிய சங்க(எனயுஎஃப்ஏஎம்)மும் கோரிக்கை விடுத்துள்ளது.

எம்ஏஎஸ், சில ஆண்டுகளுக்குமுன் தலைசிறந்த விமான நிறுவனங்கள் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இருந்தது உண்டு. 2014-இல் அது 18வது இடத்தில் இருந்தது. அதன் பின்னர் ஒரே வீழ்ச்சிதான்.2015-இல் 24வது இடம், 2016-இல் 34வது இடம், 2017-இல் 31வது இடம், கடந்த ஆண்டில் மீண்டும் 34வது இடம்.