நேற்றிரவு, பினாங்கு, ஜோர்ஜ்டவுன் அருகே, ஜாலான் தஞ்சோங் பூங்காவில், ஒரு கட்டுமான இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு மியான்மர் தொழிலாளர்கள் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
பினாங்கு சட்டமன்ற உறுப்பினர், ஜைரில் கிர் ஜொஹாரி கூற்றுப்படி, தேடல் மற்றும் மீட்புக் குழுவினர், நேற்றிரவு 11.18 மணியளவில், பாதிக்கப்பட்டவர்களுள் முதல் உடலைக் கண்டுபிடித்தது.
அதனை அடுத்து, நள்ளிரவில் மற்றொரு உடலும் இன்று அதிகாலையில் இன்னொரு உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக, இதுவரை 3 உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.
அருகிலுள்ள, ‘லோஸ்ட் பெரடாய்ஸ் ரிசோர்ட்‘ ஹோட்டல் நிர்வாகம், கான்கிரீட் சுவர் எழுப்ப அந்த நான்கு தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தியதாக அவர் கூறினார்.
தற்போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக, சம்பவ இடத்தில் இருந்த ஜைரில் தெரிவித்தார்.
“ஒரு சுவரை எழுப்ப, நான்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும் அந்தச் சுவர் சரிந்ததாகவும் ஹோட்டல் உரிமையாளர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்,” என்று மலேசியாகினியிடம் ஜைரில் கூறினார்.
இன்று இரவு வாக்கில், தேடுதல் மற்றும் மீட்புப் பணி நிறைவடையலாம் என ஜைரில் மேலும் சொன்னார்.
பினாங்கு சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர், பீ பூன் போ-ஐ தொடர்பு கொண்டபோது, உள்ளூர் அதிகாரிகள், போலிஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் உட்பட, அனைத்து தொடர்புடைய துறைகளும் தேடல் மற்றும் மீட்பு குழுவினருக்கு உதவ, சம்பவ இடத்தில் இருப்பதாகக் கூறினார்.
“இந்த நடவடிக்கையின் காரணமாக, நாங்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது, தற்போது வாகனங்களுக்கு ஒரு வழி சாலை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்,” என்று பீ கூறினார்.
இதற்கிடையில், பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை இயக்குநர், சாடோன் மொக்தார், சம்பவம் குறித்த தகவலை இரவு மணி 9.25 அளவில் பெற்றதாக கூறியதாக, பெர்னாமா செய்திகள் மேற்கோள் காட்டியுள்ளது.
“இதுவரை 15 அடி ஆழத்தில், உடல்கள் குவிந்து கிடக்கும் இடத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம், அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறியுள்ளார்.
பினாங்கில், இதுபோன்ற நிலச்சரிவுகளால் மக்கள் அதிர்ச்சியடைவது இது முதல் முறை அல்ல. அதனால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த ஆண்டு, புக்கிட் குகூஸ், பாயா தெருபோங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில், 9 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
பினாங்கு மாநகர மன்றம் மற்றும் கட்டுமான குத்தகையாளர் இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பாளர்கள் ஆவர்.
2017-ம் ஆண்டில், ஒரு மலேசிய மேற்பார்வையாளர் உட்பட, மொத்தம் 11 தொழிலாளர்கள் தஞ்சோங் பூங்காவில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டுமான இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.