பினாங்கில் அடிக்கடி நிகழும் நிலச் சரிவு குறித்து மாநில அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை என பார்டி சோசியலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) சாடியது.
தவறிழைக்கும் மேம்பாட்டாளர்கள்மீது பினாங்கு அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.அருள்செல்வன் இன்று ஓர் அறிக்கையில் கடிந்து கொண்டார்.
நிலச் சரிவுகளையும் அதனால் ஏற்படும் மரணங்களையும் மாநில அரசு கண்டுகொள்வதில்லை என்றாரவர்.
இன்னொரு நிலச் சரிவு, சில வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இறந்தனர். அது பெரிய விசயமல்ல. மேம்பாட்டாளர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் , அதுதான் முக்கியம் என்ற போக்கில் மாநில அரசு இருப்பதாக அவர் சாடினார்.
”பணிகளை நிறுத்தி வைப்பது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. நடந்துவிட்ட அசம்பாவிதத்தை விசாரிப்போம் என்று பினாங்கு அரசு கூறும். அதன்மீது ஒரு வெள்ளை அறிக்கைகூட வெளியிடப்படலாம்.. மாநில அரசு இறந்தவர்களுக்கு இழப்பீடுகூட கொடுக்கக்கூடும்.
“பல என்ஜிஓ-கள் எச்சரித்துள்ளன. ஆனால், எந்த மேம்பாட்டாளர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது, யாரும் பொறுப்பேற்கவும் மாட்டார்கள்”, என்று அருள்செல்வன் கூறினார்.
2016-இலிருந்து நேற்றுவரை பினாங்கில் 10 நிலச் சரிவுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு அக்டோபர் 18-இல் நிகழ்ந்த நிலச் சரிவில் ஒன்பது தொழிலாளர்கள் இறந்தனர் என்றும் குறிப்பிட்டார்.