மலாக்காவில் மாநில அரசாங்கத் தொடர்பு நிறுவனத்துக்கு(ஜிஎசி)ச் சொந்தமான ஒரு மருத்துவமனையில் சிலர் பதவி விலகியதை வைத்து அங்கு “இன ஒழிப்பு வேலை” நடப்பதாக அம்னோ குற்றஞ்சாட்டியிருப்பதை புக்கிட் கட்டில் எம்பி ஷம்சுல் முகம்மட் அகின் மறுத்தார்.
கோத்தா மலாக்கா அம்னோ அதன் முகநூல் பக்கத்தில், மலாக்கா புத்ரா நிபுணத்துவ மருத்துவமனையில் அதன் தலைமை செயல் அதிகாரி சொங் மே லீ -இவர் டிஏபி மகளிர் தலைவருமாவார்- அவருக்கு வேண்டியவர்களை பதவியில் அமர்த்தி “இன ஒழிப்பு” வேலையைச் செய்கிறார் எனக் குற்றஞ்சாட்டியிருந்தது.
அங்கிருந்து 10 பேர் “அழுத்தம்” காரணமாக பணி விலகியிருக்கிறார்களாம். அவர்களில் ஒன்பதின்மர் மலாய்க்காரர்கள், ஒருவர் இந்தியர் என கோத்தா மலாக்கா அம்னோ கூறிக்கொண்டது.
அக்குற்றச்சாட்டை மறுத்த அந்த மருத்துவமனையின் தலைவருமான ஷம்சுல், பணி விலகியவர்கள் 13 பேர் என்றும் அவர்களில் ஒன்பது பேர் மலாய்க்காரர்கள், இருவர் சீனர்கள், இருவர் இந்தியர்கள் என்றும் ஓர் அறிக்கையில் கூறினார்.
மருத்துவமனையில் எவ்வித இனப் பாகுபாடும் காண்பிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட ஷம்சுல், மருத்துவமனை பணியாளர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள் என்றார். 53 மலாய்க்காரர்கள், 16 சீனர்கள், எட்டு இந்தியர்கள், மற்ற இனத்தவர் மூவர் அங்கு பணி புரிகிறார்களாம்.