அஸ்மின்: எம்ஏஎஸ் விசயத்தில் பல சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன

தொடர்ந்து இழப்பைக் கண்டுவரும் மலேசிய விமான நிறுவனத்தை என்ன செய்யலாம் என அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை.

இதைத் தெரிவித்த பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி, எம்ஏஎஸ் உரிமையாளரான கஜானா நேசனல் பெர்ஹாட், பல சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது என்றார்.

“இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் கஜானா வாரியக் கூட்டத்தில் அது பற்றி விவாதிக்கப்பட்டது”, என்றாரவர்.

அது (எம்ஏஎஸ்) நிலைத்திருப்பதை உறுதிப்படுத்த என்ன செய்யலாம் என்பதை ஆராயும் பொறுப்பை கஜானாவிடமே விட்டுவிட அரசாங்கம் விரும்புவதாக அஸ்மின் தெரிவித்தார். கோலாலும்பூரில் அமனா ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட அஸ்மின் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த விசயத்தில் முடிவெடுப்பது சிரமமானது என்பதால் முடிவெடுப்பதற்குக் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

“காலக்கெடு எதுவும் கிடையாது. கஜானா பல கோணங்களில் ஆராயலாம், வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரலாம்”, என்றாரவர்.