நேற்று புக்கிட் காயு ஹித்தாம் அருகில் ஒரு பெட்ரோல் நிலையத்துக்குப் பின்புறம் உள்ள ஒரு ‘கொங்சி’ வீட்டில் மலேசிய ஆயுதப் படையினர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த மியான்மார் நாட்டவர் 20பேரைக் கைது செய்தனர்.
இரவு 11 மணி அளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஆறாவது பட்டாளத்தின் தளபதி பிரிகேடியர்-ஜெனரல் முகம்மட் ஹாலிம் காலிட் கூறினார். அனவரும் 20க்கும் 39க்கும் இடைப்பட்ட வயதினர். அப்போதுதான் அவர்கள் எல்லையில் உள்ள வேலியை உடைத்துக்கொண்டு நாட்டுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
“காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆறாவது அரச ரேஞ்சர்ஸ் ரெஜிமெண்ட் கொங்சி வீட்டுக்கு வெளியில் சிலர் கூட்டமாக நிற்பதைக் கண்டது. அங்கிருந்து நீல நிற புரோட்டோன் வீரா கார் ஒன்று புறப்பட்டுச் செல்வதையும் கண்டது.
“அந்தக் கார் சங்லூன் நோக்கிப் புறப்பட்டுச் செல்லுமுன்னர் இரண்டு மணி நேரமாக அந்த வீட்டில் நின்றிருந்தது. ஏதோ நடப்பதாக சந்தேகித்து படையினர் அதிரடிச் சோதனை நடத்தி அந்தச் சட்டவிரோத குடியேறிகள் 20 பேரையும் தடுத்து வைத்தனர்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்நாட்டில் எளிதாக வேலை கிடைக்கும் என்று ஆசையில் அவர்கள் வந்திருப்பதாக தெரிகிறது.
“சட்டவிரோத குடியேறிகள் அத்தனை பேரும் புக்கிட் காயு ஹித்தாமில் உள்ள குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்”, என்றவர் மேலும் சொன்னார்.