பாசிர் கூடாங்கில் பள்ளிகள் திறந்த சில மணி நேரத்திலேயே மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்

பாசிர் கூடாங்கில் சில நாள்களாக மூடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பிய சில மணி நேரத்திலேயே டசன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

காலை மணி 10.30 வாக்கில் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது, பலர் வாந்தி எடுத்தார்கள் என பெரித்தா ஹரியான் செய்தி ஒன்று கூறியது.

எஸ்எம்கே தஞ்சோங் புத்ரி ரிசோர்ட்தான் முதன்முதலாக பாதிக்கப்பட்டதாம். அங்கு இரண்டு மாணவர்கள் உடம்புக்கு முடியவில்லை என்று முறையிட்டனர் என்று அச்செய்தி கூறிற்று,

அதை அடுத்து எஸ்கே தாமான் பாசிர் பூத்தே. அங்கு 19 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். எஸ்கே கொபொக்கில் 32 மாணவர்கள், 2 ஆசிரியர்கள்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பள்ளிகளில் எஸ்எம்கே தாமான் நூசா டாமாய் -யும் ஒன்று சினார் ஹரியான் தெரிவித்தது.

காற்றுத் தூய்மைக்கேட்டின் விளைவாக மாணவர்கள் மூச்சுத் திணறல், வாந்தி போன்றவற்றால் அவதியுற்றதை அடுத்து ஜூன் 25-இல் பாசிர் கூடாங்கில் சுமார் 111 தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

காற்றின் தரம் வழக்க நிலைக்குத் திரும்பியதால் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.