அம்னோவில் நஜிப்பின் பிடி தளர்ந்துவருவதைச் சரிக்கட்டத்தான் ஜாஹிட் திரும்பி வருகிறாரா?

அஹமட் ஜாஹிட் ஹமிடி விடுப்பிலிருந்து திரும்பி வந்து அம்னோ தலைமைப் பொறுப்பை ஏற்பது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதிலாளாக (proxy) செயல்படுவதற்காகத்தானா என்று வினவுகிறார் இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங்.

“அம்னோவுக்குத் தலைமை ஏற்கும் ஜாஹிட் செய்த தவறுகளுக்கு உண்மையிலேயே வருந்துவாரா, மன்னிப்பு கேட்பாரா?

“அல்லது நஜிப் அம்னோ தன் கட்டுப்பாட்டைவிட்டு விலகிப் போகலாம் என்று அஞ்சுவதால் அவருடைய பதிலாளாக இருப்பதற்காகத்தான் விடுப்பிலிருந்து திரும்புகிறாரா?”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.

இதுவரை விடுப்பில் இருந்த ஜாஹிட், அம்னோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெறும் வேளையில் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க திரும்பி வருவதாக நேற்று அறிவித்தார்.

“நான் அம்னோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இன்றுடன் என் விடுப்பை முடித்துக்கொள்வதாக அறிவிக்கிறேன்.

“அதாவது இன்று முதல் அம்னோ தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்கிறேன்”, என்றாரவர்.

ஜாஹிட் தலைவர் பொறுப்பு ஏற்பதை முன்னாள் அம்னோ தலைவரான நஜிப் வரவேற்றிருப்பதையும் அவர் திரும்பி வந்து தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு அம்னோ உச்ச மன்றத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்றவர் குறிப்பிட்டிருப்பதையும் லிம் சுட்டிக்காட்டினார்.

தலைவர் பொறுப்பை ஏற்கும் ஜாஹிட், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும் ஏற்பாரா என்றும் லிம் கேட்டிருந்தார்.

“அல்லது அம்னோ தலைவர் நாடாளுமன்றத்திலும் அம்னோவுக்குத் தலைவராக இருக்க வேண்டியதில்லை என்று விட்டுக் கொடுத்திடுவாரா?”, என்றவர் வினவினார்.

இப்போது அம்னோ உதவித் தலைவரும் பெரா எம்பியுமான இஸ்மாயில் சப்ரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார்.