மலேசியர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என்று மகாதிர் கூறியதற்கு எம்டியுசி பினாங்கு கண்டனம்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலேசியர்களுக்கு வேலை செய்வதில் விருப்பம் இல்லை என்று கூறியிருப்பதால் ஆத்திரமுற்ற மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) அது வெறுக்கத்தக்க ஒரு கருத்து என்று கூறியது.

மகாதிரின் பேச்சு ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு என எம்டியுசி பினாங்கு செயலாளர் கே.வீரையா கூறினார்.

“மலேசிய தொழிலாளர்கள் உழைக்க விரும்புவதில்லை” என்று பிரதமர் கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதாரத்துக்குக் காரணமானவர்களை நாட்டின் முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாக திகழும் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் கருத்தாகும் என வீரையா கூறினார்.

வியட்நாமியரும் இந்தோனேசியரும் இங்கு கொடுக்கப்படும் சம்பளம் அவர்கள் நாட்டிலும் கிடைக்கிறது என்பதால் மலேசிய தோட்டங்களில் வேலை செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சம்பளம்தான்.

“தோட்டப்புறங்களில் வாழ்க்கை நிலைமையும் சம்பளமும் உகந்த அளவில் இருந்தால்தான் அத்துறைக்கு ஆள்களைக் கவர்ந்திழுக்க முடியும்”, என்றாரவர்.

பக்கத்தான் ஹரப்பான் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் ரிம1,500-ஆக இருக்கும் என்று வாக்குறுதி அளித்திருப்பதை வீரையா சுட்டிக்காட்டினார்.

பேங்க் நெகாரா கருத்தின்படி அதுகூட சரியான சம்பளம் அல்லதான் என்றாரவர்.

“பேங்க் நெகாரா என்ன சொல்கிறது என்றால் வாழ்க்கைக்குத் தேவையான சம்பளம், அதாவது அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்கவும் சிறிது சேமிக்கவும் போதுமான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறது”, என்றாரவர்.

அரசாங்கம் தொழிலாளர்களை மையமாகக் கொண்ட சீரமைப்புகளை அதுவும் அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் தரங்களுக்கு ஏற்ப சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றாரவர்.